ஊருக்கே கறி விருந்து கொடுக்கணும்! கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு அதிர்ச்சி தண்டனை!

மகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்காக, கிராமத்தினருக்கு அசைவ விருந்து வைக்கும்படி தந்தைக்கு உள்ளூர் மக்கள் தீர்ப்பு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் பெண் ஒருவரை, தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஒரு நபர் பலாத்காரம் செய்திருக்கிறார். இதன்பேரில், அந்த பெண்ணின் தந்தை கிராம பஞ்சாயத்தில் முறையீடு செய்துள்ளார். ஆனால், இதனை விசாரித்த பஞ்சாயத்து புண்ணியவான்கள், கொடுத்த தீர்ப்பு என்ன தெரியுமா?

மகளுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க வேண்டுமெனில், கிராம மக்கள் அனைவருக்கும் அசைவ விருந்து ஒன்றை நடத்தும்படி, அந்த நபரை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நபர், அசைவ விருந்து நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டதாகக கூறப்படுகிறது. அவர் என்றைக்கு அசைவ விருந்து நடத்துகிறாரோ அது வரைக்கும், அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக, பஞ்சாயத்தார் உத்தரவிட்டுள்ளனர்.

இதன்பேரில், குறிப்பிட்ட நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரையிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார். மகள் பலாத்காரம் செய்யப்பட்டதைவிட, நீதி கேட்ட கொடுமைக்காக ஊரை விட்டே குடும்பத்துடன் தள்ளிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்துக் கொண்டு அந்த குடும்பம் சிரமப்படும் நிலையில் இப்படி ஊரே திரண்டு அவர்களிடம் கறி விருந்து கேட்பது நியாயமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு தகுந்த தண்டனை வழங்கவும் வலியுறுத்தப்படுகிறது.