உள்ளாட்சி தேர்தலுக்கு தேதி அறிவிச்சாச்சு! டென்ஷனில் கிறிஸ்தவர்கள்!ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் இல்லையாம்!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்று சந்தேகம் இருந்துவந்தாலும், இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளை, மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி வெளியிட்டார்.


 டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதி தேர்தல் என்று அறிவித்து இருப்பது கிறிஸ்தவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 13ம் தேதி முடிவுக்கு வரும் என்றும் டிசம்பர் 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறும் கடைசி நாள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 2ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்ததாக ஜனவரி 11ம் தேதி மேயர், நகராட்சித்தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நகர்ப்புறங்களுக்கான தேர்தலுக்குத் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல், மற்ற பதவிகளுக்கு மட்டுமே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் அறிவிப்பு கிறிஸ்தவ மக்களிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஏனென்றால் கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரையிலும் கிறிஸ்தவ இனத்தினரின் விழா காலம். மேலும் வெளியூர் சுற்றுப்பயணம் செய்பவர்களுக்கும் அதுதான் சுற்றுலா காலம். அதனால், இந்தத் தேதிகளில் தேர்தல் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஏற்கெனவே இந்தத் தேர்தலுக்கு எதிராக ஆயிரத்தெட்டு வழக்குகள் இருக்கும்போது, கிறிஸ்தவர்கள் வழக்கும் சேரப்போகிறது, அம்புட்டுத்தான்.