அணைகளில் நீர் அதிகரிச்சாச்சு, தண்ணீர் திறந்தாச்சு, சிக்கனமா செலவழிங்க. விவசாயிகளுக்கு எடப்பாடி அறிவுரை.

பருவமழை பெய்துவருவதால் தமிழகமெங்கும் அணைகளில் நீர் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் இன்று கெலவரப்பள்ளி நீர் தேக்கத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி தண்ணீர் திறந்துவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு 12.8.2020 முதல் 9.12.2020 வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.