மருமகளுடன் கோவிலுக்கு சென்ற மாமனாருக்கு நேர்ந்த விபரீதம்! பூச்சி மருந்தை குடித்த பரிதாபம்! ஏன் தெரியுமா?

ஆந்திர மாநிலத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்கான தலித் சமூகத்தைச் சேர்ந்தவரையும் அவரது மருமகளையும் அவமானப்படுத்திய ஊர் தலைவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அனந்தபூர் மாவட்டம் பிராமணப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெட்டண்ணா என்பவர் தாய் வீட்டுக்குச் சென்ற தனது மருமகளை ஊருக்குள் அழைத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அண்மையில் குடமுழுக்கு முடிந்த ஆஞ்சநேயர் கோவில் ஒன்று வழியில் இருந்தது. அங்கு இருந்த வாய் பேச முடியாத அர்ச்சகர் பெட்டண்ணாவை வந்து பிரசாதம் வாங்கிச் செல்ல சைகை செய்ததை அடுத்து இருவரும் கோவிலுக்குள் சென்று பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பினர். 

ஆனால் குடமுழுக்கு அண்மையில் முடிந்ததால் குறிப்பிட்ட நாட்கள் வரை கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி ஊர்ப் பெரியவர்கள் சிலர் பெட்டண்ணாவையும் அவரது குடும்பத்தினரையும் அவமானப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கோவிலுக்கு மீண்டும் கொடிமரம் அமைக்கவும், சுத்தம் செய்யும் பணிகளை செய்யவும் பெட்டண்ணா 35 ஆயிரம் ரூபாய் தர அவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெட்டண்ணாவிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லாததை அடுத்து அவரிடம் அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

ஊராரின் இத்தகைய செயல்பாடுகளால் அவமானமும் வேதனையும் அடைந்த பெட்டண்ணா பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். ஆனால் அவரை தடுத்து நிறுத்திய மனித உரிமை ஆர்வலர்கள் சிலர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.

அதன் பேரில் காவல் நிலையத்துக்கு சென்ற பெட்டண்ணாவின் புகாரை ஏற்க போலீசார் முதலில் மறுத்த நிலையில், பின்னர் மனித உரிமை ஆர்வலர்களின் தலையீட்டின் பேரில் ஊர் தலைவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே பெட்டண்ணா தன் மருமகளை கோவிலுக்குள் அழைத்துச்  சென்றது மட்டும் பிரச்சினை அல்ல என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர்கள், அவர்கள் தலித் இனத்தைச்  சேர்ந்தவரக்ள் என்பதுதான் முக்கிய பிரச்சனை என்று கூறியுள்ளனர்.