அசிடிட்டி, வாய்வுத்தொல்லை தினமும் பாடாய்படுத்துதா? பாரம்பரிய மருந்து ஓம தண்ணீர் இருக்கே!

ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.


அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.

நீங்கள் நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். வாய்வுத் தொல்லை ஒருவருக்கு ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகள் அல்லது உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும். இப்பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணத்தை ஓம வாட்டர் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும். எப்போது உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகி, முறையாக வெளியேற்றப்படுகிறதோ, அப்போது உடல் பருமன் அடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். ஓம நீரை தினமும் குடித்து வந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகி, உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும். 

அசிடிட்டி என்னும் நிலை, இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தால் ஏற்படுவதாகும். அசிடிட்டி வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும் மற்றும் சில சமயங்களில் நெஞ்சு, தொண்டை போன்ற பகுதிகளும் எரிச்சலுக்கு உள்ளாகும். ஒருவருக்கு அசிடிட்டியானது சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக கார உணவை உண்பது போன்றவற்றால் ஏற்படுவதாகும்.

எனவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோம்பு மற்றும் ஓமத்தை ஒன்றாக வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால் ஓம நீரைக் குடியுங்கள்.