பெங்களூரு: மியூசிக் டீச்சரை கொன்ற வழக்கில் சயனைடு மோகன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, அவனுக்கு வரும் செப்.,25 அன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
கருத்தடை மாத்திரையில் சயனைடு விஷம்! நம்பி பழகிய 32 பெண்களை தீர்த்துக் கட்டிய மோகன்! மியூசிக் டீச்சரால் சிக்கிய திருப்பம்!
கர்நாடகாவைச் சேர்ந்தவர் மோகன். சினிமா படங்களில் வருவதைப் போல பெண்களை காதலித்து, அவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டபின், அவர்களை சயனைடு கலந்த கருத்தடை மாத்திரை கொடுத்து கொலை செய்வது இவனது வழக்கம். கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, கர்நாடகாவில் சுமார் 32 பெண்கள் இவ்வாறு சயனைடு மாத்திரை கொடுத்து கொல்லப்பட்டனர். அம்மாநிலத்தையே உலுக்கிய இந்த சீரியல் கொலை வழக்கில், போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
நீண்ட முயற்சிக்குப் பின்னர், கொலையாளியை நேரில் பார்த்த 38 பேரின் சாட்சியங்களின்படி போலீசார் சயனைடு மோகனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனை தொடர்ச்சியாக காவலில் வைத்து விசாரித்து வரும் போலீசார், இதுவரை அவன் மீதான 15 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டை உறுதி செய்து, தண்டனை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், எஞ்சிய கொலை வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஒன்றுதான் 2007ம் ஆண்டு உப்பர்பேட்டில் நிகழ்ந்த மியூசிக் டீச்சரின் கொலை. கேரளாவைச் சேர்ந்த அந்த மியூசிக் டீச்சருக்கு சினிமா சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி, ஆசை வார்த்தை கூறி படிப்படியாக தனது வலையில் வீழ்த்திய மோகன், பெங்களூரு அழைத்து வந்து, காட்டன்பேட் ரோட்டில் உள்ள ஓட்டலில் ரூம் போட்டு செக்ஸ் உறவு வைத்திருக்கிறான்.
அடுத்த நாள் அந்த பெண்ணை சயனைடு கலந்த கருத்தடை மாத்திரை சாப்பிட கொடுத்த பின், உப்பர்பேட் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டான். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், தற்போது நீதிமன்றத்தில் குற்றத்தை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, செப்டம்பர் 25ம் தேதியன்று மோகன் மீது மங்களூரு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவிக்க உள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 16 வழக்குகளில் மோகன் மீதான குற்றம் நிரூபணமாகியுள்ளது. இன்னும் 16 வழக்குகள் எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.