அம்பேத்கர் தலையை வெட்டுவதுதான் புரட்சியா..? கலவரத்தை தடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. ஏராளமான நபர்கள் இந்த வேலையை போட்டோ எடுத்து கொண்டாட்டமாக உடைத்துத் தள்ளியிருப்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.


இதையடுத்து ஏற்பட்டு கடும் அதிர்வலைகளைத் தொடர்ந்து, வன்முறை அக்கம்பக்கமெங்கும் வெடிக்கும் சூழல் நிலவியது. ஆனால், இதனை நல்லபடியாக உடனடியாக தடுத்து நிறுத்தியுள்ளது தமிழக அரசு. ஆம், சிலை உடைக்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக புதிய சிலை ஒன்றைத் தமிழக அரசு நிறுவியிருக்கிறது. 

சமூகப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாகத் தமிழக அரசு விரைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டத்தான் வேண்டும். அதே நேரம், இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்த குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதுவே ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடும். எனவே, இதில் எவ்வித சமரசமும் கூடாது.

தமிழகம் சாதி, மத பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக ஆகிவிடக்கூடாது. தந்தை பெரியார் உழைத்து உருவாக்கிய சமூக நீதி பூமியாகவே இது தொடர வேண்டும். காவல் நிலையத்துக்கு முன்னரே இப்படியொரு அட்டூழியம் நிகழும் என்றால், இதுபோன்று தமிழகத்தில் எங்கேயும் தொடரலாம். எனவே அழுத்தமான முற்றுப்புள்ளி வைக்கத்தான் வேண்டும்.