ஸ்பைஸ்ஜெட், முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் பங்கு நிலை எப்படி இருக்குன்னு தெரியுமா? இன்றைய சென்செக்ஸ் அனாலிசஸ்!

இன்றைய காலை வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி பிஎஸ்இ 500 குறியீட்டில் 32 பங்குகள் 50 முதல் 100% வரை உயர்ந்தன. இன்போ எட்ஜ், டைட்டன் கம்பெனி, வினாட்டி ஆர்கானிக்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை இதில் அடங்கும்.


 விஜயதசமி, திருநாளை கொண்டாடி வரும் இவ்வேளையில் ஈக்விட்டி சந்தைகளில், கடந்த ஒரு வருடத்தில் கரடியை வென்று காளைகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தது, தற்போது நிலமை சீராகி குறுகிய கால முதலீட்டாளர்கள் விஜயதசமி விழாவினை கொண்டாட நல்ல ஒரு வாய்ப்பினை அளித்துள்ளது இந்திய பங்குச் சந்தை.

உள்நாடு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சங்களால், இந்திய முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வருடத்தில் நிலையான வைப்பு (எஃப்.டி) வருமானத்தை நோக்கி சென்றனர்

சிறு முதலீட்டாளர்களின் முதலீடு, பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சராசரி சந்தை மூலதனத்தின் படி, கடந்த ஒரு வருடத்தில் 4 லட்சம் கோடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் குறியீட்டை பொறுத்தவரை, கடந்த ஒரு ஆண்டில் சென்செக்ஸ் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் நிஃப்டி 2018 விஜயதசமி நாள் முதல் 2019 விஜயதசமி வரை சுமார் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளதை காண முடிகிறது.

அதன்படி பிஎஸ்இ 500ல் இன்டர் குளோப் ஏவியேஷன், கிரெடிட் ஆக்சஸ் கிராமீன் மற்றும் அவாஸ் ஃபைனான்சியர்ஸ் போன்ற பங்குகள் 100 சதவீதத்திற்கு மேல் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

அடுத்ததாக பிஎஸ்இ 500 இண்டெக்சில் இன்ஃபோ எட்ஜ், டைட்டன் கம்பெனி, வினாட்டி ஆர்கானிக்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஸ்பைஸ்ஜெட், அதானி பவர், பஜாஜ் நிதி, கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி. போன்ற 32 நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் 50 முதல் 100 சதவிகிதம் வரை லாபத்தை கொடுத்துள்ளது.

அடுத்ததாக மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் உள்ள நிறுவனங்களைக் கவனித்தால், 13 நிறுவனங்களின் பங்குகள் 10 முதல் 80 சதவீதம் உயர்ந்து லாபத்தை கொடுத்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ், ஆர்ஐஎல், எச்.டி.எஃப்.சி, எச்.டி.எஃப்.சி வங்கி, பாரதி ஏர்டெல், ஆசிய பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் நிதி போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.

இதே காலகட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் நிஃப்டியில் உள்ள 20 நிறுவனங்களின் பங்குகள் இரட்டை இலக்க வருமானத்தை அளித்துள்ளது, உதாரணமாக பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பிபிசிஎல் பங்குகள் தலா 80 சதவீதம் லாபத்தைக் கொடுத்துள்ளது.

பிஎஸ்இ 500ல் உள்ள 301 நிறுவனங்களின் பங்குகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் லாபங்களை கொடுத்துள்ளது. மேலும் இதிலுள்ள 40 நிறுவனங்களின் பங்குகள் 50 முதல் 90 சதவிகிதம் வரை நஷ்டத்தினை சந்தித்துள்ளதும் கவனிக்கத்தக்கது . உதாரணமாக வோக்ஹார்ட், ரெயின் இண்டஸ்ட்ரீஸ், எஸ்.ஐ.எல், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், சுஸ்லான், டிஷ் டிவி, காபி டே, ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.

துறை வாரியாக கணக்கிட்டால் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் செப்டம்பர் மாதத்தில் அதன் உற்பத்தியை 17.5 சதவிகிதம் குறைத்துள்ளதாகவும், கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,32,199 கார்களை உற்பத்தி செய்துள்ளது என்றும். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 1,60,219 கார்களை உற்பத்தி செய்ததாகவும் தெரிவிக்கிறது.

அடுத்ததாக டாடா மோட்டார்ஸ் லிமிடெட் செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்களின் உற்பத்தியில் 63 சதவீதம் சரிந்து 6,976 ஆக குறைந்துள்ளதாகவும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 18,855 யூனிட்டுகள் உற்பத்தி செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட அனைத்து முக்கிய வாகன உற்பத்தியாளர்களும் செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் இரட்டை இலக்க சரிவைக் கண்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

அடுத்ததாக நகை வணிகத்தில் ஈடுபட்டு வரும் டைட்டன் கம்பெனி லிமிடெட் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் முக்கிய நகை வணிகத்தின் விற்பனை வளர்ச்சி முடங்கியிருப்பதாகக் கூறியுள்ளது.

மணியன் கலியமூர்த்தி