அனுமதியின்றி சூர்யா ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி! கொடுத்த மன்னிப்பு கடிதத்தை பார்த்து அதிர்ந்த இன்ஸ்பெக்டர்!

அனுமதியின்றி ஊர்வலம் சென்றதற்காக மன்னிப்பு கடிதம் எழுதிய மாணவர்கள் தமிழை தப்பு தப்பாக எழுதியுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் வேதனை தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.


சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான வெள்ளிக்கிழமை அன்று கடலூர் மாவட்டம் புவனகிரியில் சூர்யாவின் ரசிகர்களும், கல்லூரி மாணவர்களும் பேண்டு வாத்தியம் முழங்க திரையரங்கிற்கு ஊர்வலமாக சென்றுள்ளனர்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதால் அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையம் அழைத்து சென்று எச்சரித்துள்ளார். காவல்துறையினர் அனுமதி பெறாமல் ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

மேலும் இனிமேல் இதுபோல் செய்ய மாட்டோம் என உறுதி மொழி கடிதம் எழுதித் தருமாறு கூறியுள்ளார். பின்னர் அவர்கள் எழுதிய கடிதத்தை படித்து பார்த்த ஆய்வாளர் அம்பேத்கர் அதிர்ச்சி அடைந்தார். கல்லூரி மாணவர்கள் தமிழில் எழுதிய அந்த கடிதத்தில் ஏகப்பட்ட எழுத்து பிழைகள் இருந்துள்ளது.

ஒரு மாணவர் ஆய்வாளர் என்பதற்கு பதில் 'ஆவ்யாளர்' என்று எழுதியதை மனதை திடப்படுத்திக் கொண்டுதான் படித்ததாகவும், படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதாகவும் ஆய்வாளர் அம்பேத்கர் நகைச்சுவையுடன் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். இதே நிலை கல்லூரி மாணவர்களுக்கு நீடித்தால் தமிழ் மொழியை யார் 'காப்பான்' என வினவியுள்ளார் ஆய்வாளர் அம்பேத்கர்.