ஆலமரத்தின் மேல் பட்ட ஒளி..! வித்தியாசமானநிழலை பார்த்து மிரண்ட மக்கள்..! கடலூர் சூரியகிரகணம்!

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் சூரிய கிரகணத்தை பிரத்யேக கருவி மூலம் பார்த்து ரசித்த நிலையில் கடலூரில் சூரிய கிரகணத்தின்போது ஒரு அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ, புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் அறிய நிகழ்வான வளைய சூரிய கிரகணத்தை காண கடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதைக் காண வெள்ளி கடற்கரையில் மாணவர்கள் , பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அனைவரும் தொலைநோக்கி, சூரிய வடிகட்டி கண்ணாடி, பிம்ப பிரதிபலிப்பு முறைகளில் கிரகணத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இதற்கிடையே கடலூர் பெரியார் கல்லூரி அருகே ஒரு ஆலமரத்தின் மீது விழுந்த சூரிய கிரகண ஒளியால் தரை முழுவதும் நிலா வடிவத்தில் நிழல் பிரதிபலித்தது. இந்த காட்சி பிரமிப்பாக இருந்தது. சூரிய கிரகண நிகழ்வின் போது மரத்தின் அடியில் நிலா போன்று நிழல்கள் பிரதிபலித்ததை அனைவரும் பார்த்து வியப்படைந்தனர்.  

பூமியின் துணைக்கோளான நிலவு, பூமியை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்றது. அதேபோல், சூரியனை, பூமி நீள்வட்டபாதையில் சுற்றி வருகிறது. இந்த இயற்கையான நிகழ்வில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது. 

சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, நிலவு, சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.