ஒரு கையில் குடை டார்ச்! மறு கையில் செப்பல்! விளை நிலத்தில் ஒரே நொடியில் பறிபோன விவசாயி உயிர்!

கடலூர் மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் விடிய விடிய கன மழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் மரங்களும் சில மின்கம்பங்களும் சாய்ந்தன. சாலைகளிலும் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.  

பண்ருட்டியில் வசித்து வந்த விவசாயி அமலநாதன் இன்று காலை விவசாய பணிகளை மேற்கொள்ள குடையுடன் நிலத்திற்கு சென்றார். அப்போது விவசாய நிலத்தில் இரவு பெய்த மழையாலும், சூறைக்காற்றாலும் ஒரு மின்கம்பி அறுந்து விழுந்திருந்தது. மின்கம்பி செடிகளுக்கு நடுவே கிடந்ததால் அது கண்ணுக்கு தெரியவில்லை. இது தெரியாமல் அந்த இடத்தை கடக்க முயன்ற விவசாயி அமலநாதன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் அமலநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் விவசாயி அமலநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விவசாயம் மரணம் குறித்து வழக்குப்பதிந்த போலீசார் அறுந்து கிடந்த மின்கம்பியை மீண்டும் பொருத்த மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி மின்கம்பியை மீண்டும் கம்பத்தில் பொருத்தினர்.