விடாது காக்கா! எங்கே போனாலும் இளைஞனைத் துரத்தி துரத்தி கொத்தும் காக்கைகள்! 3 வருடங்களாக தொடரும் துயரம்!

அந்த பரிதாபத்துக்குறிய மனிதரின் பெயர் சிவா கேவத்!.மத்தியபிரதேச மாநிலம் ஷிவபுரி மண்டலத்தில் இருக்கும் சுமேலா என்கிற கிராமத்தில் வசிக்கிறார்.இவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் போதும் ,காக்கைகள் துரத்தித் துரத்திக் கொத்துகின்றன.சில சமையம் காக்கைகள் அவர் வீட்டு வாசலிலேயே காத்திருப்பதும் உண்டாம்.


காத்திருப்பது காக்கைகள் மட்டுமல்ல சுமேலா கிராமவாசிகளுக்கும் இது ஒரு இலவச எண்டர்டெயின்மெண்ட் ஆகிவிட்டதால்,சிவா கேவத் எப்போது வெளியே வருவார் என்று காத்திருப்பார்களாம்.அந்த ஊருக்கு யாராவது வெளியூர்களில் இருந்து விருந்தினர் வந்தால் சிவா கேவத் வீட்டுக்கு அழைத்து வந்து அவரை வெளியே அழைத்து டெமோ காட்டச்சொல்கிறார்களாம்.

தினகூலித் தொழிலாளியான சிவா கேவத் மூன்று வருடம் முன்பு சாலையில் போய்க்கொண்டு இருக்கும் போது வலையில் சிக்கிக் கொண்ட ஒரு காக்கை குஞ்சை பார்த்திருக்கிறார்.இரக்கப்பட்டு அதை வலையில் இருந்து விடுவிக்க முயற்சிக்கையில் அந்த காக்கை குஞ்சு இறந்து விட்டதாம்.அது முதல் காக்கைகள் இவர் மீது தொடர் தாக்குதல் நடத்துகின்றனவாம்.

ஆரம்பத்தில் எதேச்சையாக நடப்பதாகத்தான் நினைத்திருக்கிறார்.ஆனால்,அந்தக் காக்கைகள் ஊருக்குள் வேறு யாரையும் கொத்துவதில்லை,தன்னை மட்டுமே வேட்டையாடுகின்றன என்று அவருக்குத் தாமதமாகத்தான் புரிந்திருக்கிறது.அவரது தலை ,கை, கால் என எல்லா இடத்திலும் காக்கைகளால் கொத்தப்பட்ட காயங்கள் இருக்கின்றன.

தினக்கூலித் தொழிலாளியான சிவாவால் காக்கைகளுக்கு பயந்து வீட்டுக்குள்ளும் இருக்க முடியாது.அதனால் இப்போது சிவா கேவத் எங்கே போனாலும் கையில் குச்சியை எடுத்துக்கொண்டுதான் போகிறார்.ஏம்ப்பா இதெல்லாம் கின்னஸ் சாதனையில் இடம் பெற வழியில்லையா!.