ஒரே நாளில் 10 விக்கெட்டை சாய்த்து அசத்தல்! பாகிஸ்தான் வீரரின் புதிய சாதனை!

நியூசீலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா பத்து விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


துபாயில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பந்து வீச்சாளர் யாஷிர் ஷா சாதனை படைத்துள்ளார்.

   நியுசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 3வது நாளில் நியுசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். 50 ரன்கள் வரை விக்கெ எதையும் இழக்காமல் நியுசிலாந்து வீரர்கள் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் லெக் ஸ்பின்னர் யாஷிர் ஷா வந்த பிறகு நிலைமை மாறியது.

   யாஷிர் ஷாவின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் நியுசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மொத்தமாக 12 ஓவர்கள் 3 பந்துகளை வீசிய யாஷிர் ஷா 8 விக்கெட்டுகளை சாய்த்தார். இதற்காக அவர் 41 ரன்கள் மட்டுமே விட்டுக கொடுத்தார். இதனால் 90 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியுசிலாந்து ஃபாலோ ஆன் ஆனது.

  தொடர்ந்து 328 ரன்கள் பின்னடைவுடன் 2வது இன்னிங்சையும் நியுசிலாந்து தொடர்ந்தது- 2வது இன்னிங்சிலும் பாகிஸ்தானின் ஆதிக்கம் தொடர்ந்தது. அதிலும் யாஷிர் ஷா தொடர்ந்து நியுசிலாந்து வீரர்களுக்கு சிம்ம சொப்பமானக திகழ்ந்தார். முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகளை சாய்த்த அவர் 2வது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

   இதனால் ஆட்டத்தின் 3வது நாளில் மட்டும் யாஷிர் ஷா பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதாவது ஒரே நாளில் பத்து விக்கெட்டுகளை அவர் சாய்த்திருந்தார். இதற்கு முன்பு இந்தியாவின் அனில் கும்ப்ளே கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே நாளில் பத்து விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் பாகிஸ்தானின் அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்தது குறிப்பிடத்தக்கது.