தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த தீபாவுக்கு நீதிமன்றம் கண்டிப்பு.!

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியதும் அதற்கு இழப்பீடு நிர்ணயித்துப் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை எடுக்கவும் எதிர்ப்புத் தெரிவித்து, ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. தனியார் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு உரிமை சட்டப்படி உரிமையில்லை” என்றும் தீபா சார்பில் வாதிடப்பட்டது. 

அரசு தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், ’நிலம் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, போயஸ் வீட்டு சாவியைக் கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் இருப்பதாகவும், அதே அமர்விற்கு தீபாவின் வழக்கை மாற்றுவதாகவும் நீதிபதி பரிந்துரைத்தார். அதுவரை அசையும் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தீபா தரப்பு வலியுறுத்தியது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் என தீபாவிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பு கோரிக்கையையும் நிராகரித்தார். இந்த கேள்விக்கு சரியான விடை கிடைக்காத பட்சத்தில், தீபா, தீபக் வாரிசு விவகாரத்திலும் பிரச்னை வரலாம் என்றெ தெரிகிறது.