இனி சிலிண்டர் டெலிவரிக்கு ரூ.60 கட்டாய டிப்ஸ் இல்லை! டெலிவரி பாய்ஸ்களுக்கு விரைவில் வைக்கப்படப் போகும் முறையான ஆப்பு!

சென்னை: சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கும் நபர்களுக்கு நீதிமன்றம் செக் வைத்துள்ளது.


சென்னை அண்ணனூரைச் சேர்ந்த டாக்டர் லோகரங்கன், உயர் நீதிமன்றத்தில் இதுபற்றி  வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள், தனி வீடு, அடுக்குமாடி வீடு என்பவற்றிற்கு ஏற்ப, ரூ.20 முதல் ரூ.100 வரை வலுக்கட்டாயமாக டிப்ஸ் வசூலிக்கிறார்கள்.

இதுதவிர சம்பந்தப்பட்ட சிலிண்டர் நிறுவனங்களும் டெலிவரிக்கு  கட்டணம் வசூலிக்கின்றன. எனவே, இந்த டிப்ஸ் வசூலிப்போர் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும்,'' எனக் கூறியிருந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, இந்த டிப்ஸ் வசூல் பற்றி ஏற்கனவே 2124 புகார்கள் உள்ளன. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பின்ர். இதற்கு பதில் அளித்த அந்த வழக்கறிஞர்கள், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தெரிவித்தனர்.

ஆனால், ''இதனை ஏன் இணையதளத்தில் வெளியிடவில்லை எனக் கேட்ட நீதிபதிகள், இதுபற்றி நவம்பர் 1ம் தேதிக்குள் எண்ணெய் நிறுவனங்கள் உரிய பதில் அளிக்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டனர்.