உண்மையான பத்திரிகையாளர்கள் யார் என்று கேட்கும் நீதிமன்றம், உண்மையான வழக்கறிஞர்கள் யார் என்று கேட்குமா?

'பத்திரிக்கையாளர்' என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கபட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்த விவகாரத்தில், போலி பத்திரிகையாளர்களைவிட, போலி வழக்கறிஞர்கள்தான் அதிகம் உலவுகிறார்கள். முதலில் அவர்களை நீதிமன்றம் களை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும்,

வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்தான் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

பத்திரிக்கையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி கொள்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்சள் பத்திரிக்கை நடத்துபவர்களும் தங்களை பத்திரிக்கையாளர் என கூறி கொள்வது வருத்தத்துகுறியது என தெரிவித்தனர்.

பத்திரிக்கைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிக்கை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது பத்திரிக்கைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்வதாகவும், பத்திரிக்கை சங்கங்களை போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.

இது குறித்துப் பேசும் பத்திரிகையாளர்கள், இன்று நாட்டில் போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பெருகி வருகிறது. கட்டப்பஞ்சாயத்துகளில் இந்த போலி வழக்கறிஞர்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். இவர்களை முதலில் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக போலிகள் களையப்பட வேண்டும்.