திருமணமாகி 15 வருடம்..! வயதும் 40 ஆனது..! இனி முடியாது..! குழந்தை இல்லா தம்பதி எடுத்த பகீர் முடிவு!

சென்னை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அம்பத்தூர் பாடியில் உள்ள தேவர்நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (40). இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களது சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள நகரி ஆகும். இவர்களுக்கு  திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை ஏதும் உண்டாகவில்லை. இதனால், இருவரும் மிகுந்த மன வேதனைக்கு  உள்ளானதோடு, இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடமும் புலம்பி வந்துள்ளனர்.  

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக, சந்திரசேகரன் வீடு பூட்டிக் கிடந்துள்ளது. அத்துடன் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த  அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்ததில்,  

கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு இறந்து கிடந்தனர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், அவர்கள் 3 நாள் முன்பாகவே தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. இச்சம்பவம் பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.