ரயில்வே டிராக் அருகே குண்டு வெடித்தது! மதுரையில் பதற்றம்!

மதுரையில் ரயில்வே டிராக் அருகே குண்டு வெடித்த காரணத்தினால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.


இன்று காலை மதுரை பனங்காநத்தம் பகுதியில் திடிரென பயங்கர சப்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில்வே டிராக் பகுதியில் இருந்து புகை வந்தது.

முதலில் டிராக் போடும் பணியில் ஏதாவது விபத்து நேர்ந்திருக்கலாம் என மக்கள் கருதினர். ஆனால் அந்த இடத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் நடத்திய ஆய்வில் ரயில்வே டிராக் அருகே வெடித்தது நாட்டு குண்டு என்பதை கண்டுபிடித்தனர். சணல், இரும்பு மற்றும் வெடி பொருட்கள் அங்கு சிதறி கிடந்தன.

இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விசாரணை நடைபெற்றது.

அப்போது முதல் நாள் இரவு அப்பகுதியில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை அடையாளம் காண 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் ரயில்வே டிராக் அருகே குண்டு வெடித்த தகவல் அறிந்த பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். ஆனால் அது நாட்டு குண்டு தான் என்றும் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.