சகல முன்னெச்சரிக்கைகளும் எடுக்கப்படும் கவர்னர் மாளிகையிலே கொரோனா நுழைந்துவிட்டது! தமிழக ஆளுநர் மாளிகை உறுதி..!

தமிழகத்தில் சகல கட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என்று பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் சென்னை மாவட்ட கலெக்டர் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த நிலையில், கவர்னர் மாளிகையிலும் கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. அதனை இன்று முறைப்படி தமிழக ஆளுநர் மாளிகை உறுதி செய்தது. இதுகுறித்து செய்திக் குறிப்பில் இருக்கும் தகவல் இதுதான்.

, “ராஜ் பவனில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராஜ்பவன் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முப்பது ஐந்து பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்றும், மூவருக்கு பாசிட்டிவ் என்றும் முடிவுகள் வந்தன. பாசிட்டிவ் ஆன மூவர் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 28) ராஜ்பவன் மருத்துவ அதிகாரி ஆளுநருக்கு வழக்கமான உடல்நல பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்போது ஆளுநர் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தார். எனினும் ஏழு நாட்கள் தனிமையில் இருக்குமாறு ஆளுநருக்கு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆளுநர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் கவர்னர் மாளிகையிலே கொரோனா தொற்று வந்துவிட்டது என்றால் நம் வீடுகளுக்கு வர எத்தனை நேரமாகும். உஷாராகவும், எச்சரிக்கையாகவும் இருங்க மக்களே.