கள்ள மார்க்கெட் கொரோனா மருந்துகள் விற்பனையில் படு ஜோர்..! இதன் பக்கவிளைவுகள் என்ன என்பது எப்போது தெரியவரும் ..?

கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டறியப்படவில்லை என்பது உண்மை. ஆனால், ரெம்டெசிவர் (Remdesivir) மருந்து, கொரோனாவை குணப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுவது மருத்துவர்களுக்குத் தெரியவந்துள்ளது.


ஆகவே, ரெம்டெசிவர் மருந்தை அவசர சிகிச்சைக்காக பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (Food and Drug Administration) அனுமதி அளித்தது. இந்தியாவிலும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் இம்மருந்தை வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த சிப்லா,ஹெட்டேரோ, மைலான் என்.வி., ஜுப்லியன்ஸ் லைப் சயின்சஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் இந்த மருந்தை உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டன. அதன்படி, சிப்லா நிறுவனம் இந்தியாவில் ரெம்டெசிவர் மருந்தை அறிமுகம் செய்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த வேறு ஒரு நிறுவனமும் ரெம்டெசிவர் மருந்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஊசி மருந்தின் விலை ரூ.6,000 என நிர்ணயம் செய்திருக்கும் நிலையில், தமிழகமெங்கும் இந்த ஊசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், ஒரு ஊசியின் விலை 50 ஆயிரம் வரைக்கும் கள்ள மார்க்கெட்டில் சக்கைபோடு போடுகிறது.

ரெம்டெசிவர் மருந்தை தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே வழங்க முடியும். அனைவருக்கும் இந்த மருந்தை பயன்படுத்த முடியாது என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருந்தாலும் பலருக்கும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இது எந்த வகையில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வரும் மாதத்தில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.