அக்டோபரில் உச்சம் தொடுகிறதா கொரோனா தொற்று..? எச்சரிக்கை மக்களே

சமீபத்தில் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், வரும் அக்டோபர் மாதம் கொரோனா தொற்று உச்சம் தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும், வரும் 2021ம் ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கவே செய்யும். அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஆகவே, இப்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கும் கொரோனா தொற்றுக்கும் இடையிலான தொடர்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பொருளாதார பிரச்னைகளை சமாளிக்கவே இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 தடுப்பு மருந்து இன்னமும் ஆய்வு நிலையில்தான் உள்ளன. மேலும், நோயை குணப்படுத்த நேரடியான மருந்து, மாத்திரை, ஊசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவே, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். 

எனவே, கடுமையான ஊரடங்கு நேரத்தில் இருந்ததுபோலவே, அவசியமான காரணத்திற்கு மட்டும் வெளியில் செல்லுங்கள். முகம்/வாய் இரண்டையும் முழுவதுமாக மூடக்கூடிய முகக்கவசத்துடன் செல்லுங்கள்.

யாருடனும் பேசும்போது முகக்கவசத்தை அகற்றாமல் பேசுங்கள். கடையிலோ வங்கியிலோ பேருந்து ஆட்டோ பயணத்திலோ அந்நியர்களிடம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கோவில்களில் கூட்டமிருந்தால் தூரத்தில் இருந்து வணங்கி விட்டு வந்து விடுங்கள்.

முடிந்த வரையிலும் பொதுப் போக்குவரத்தை தவிர்த்துவிடுங்கள். திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். உயிர் வாழ்தலே அனைத்தையும்விட முக்கியம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். கடுமையான காலம் முடிந்துவிடவில்லை என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடனே இருங்கள்.