50 ஆயிரத்துக்கு 2 லட்சம் கொடுத்துட்டேன்..! ஆனாலும்..! மனைவி, மகன்களுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு! நெல்லை பரபரப்பு!

கந்து வட்டிக் கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேல கருங்குளம் பீடி காலனியில் கூலித் தொழிலாளி அருள்தாஸ், மாரியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  

அருள்தாஸ் 5 ஆண்டுகளுக்கு முன்னர் மேலகுலவணிகர் புரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு வட்டி என கூறிவிட்டு தற்போது 10 வட்டி என என்னிடம் கூறி வசூலித்ததாக கூறப்படுகிறது. மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளாக ரூ.2 லட்சம் வரை கொடுத்துள்ளார் அருள்தாஸ். ஆனால் வறுமை துரத்தியதால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடன் கொடுத்தவர் ரவுடி ஒருவரை அழைத்து வந்து பணம் தரும்படி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வேதனை அடைந்த அருள்தாஸ் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு அவரை உள்ளே செல்லவிடமால் போலீஸ் தடுத்து நிறுத்தினர். உடனே அருள்தாஸ் மண்எண்ணையை தனது குடும்பத்தார் மீது ஊற்றினார். தன்மீதும் ஊற்றிக்கொண்டு குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார்.

உடனடியாக பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மீட்டு தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து அவர்கள் நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.