தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியும் தொடர் வெற்றியும்! காரணம் இது தான்! ஒரு பரபர ரிப்போர்ட்!

இயக்குனர் - ஹீரோ கூட்டணிங்கிறது உலகம் முழுக்க இருக்குற ஒரு விஷயம்.


ஒரு இயக்குனர் கூட ஒரு ஹீரோ தற்செயலா ஒரு படத்துல வேலை பார்க்கப்போக, அவங்க ரெண்டுபேருக்கும் நடுவுல ஒரு பாண்ட் உருவாகி அது அப்படியே அடுத்தடுத்த படங்கள்ல தொடருவதை நாம பார்க்கமுடியும். அது பல சமயங்கள்ல வெற்றிகரமாவும் இருந்திருக்கு.டீ காப்ரியோ - ஸ்கார்சஸி கூட்டணி அப்படி உருவாச்சி.

அதேமாதிரி டொரண்டினோ - சாமுவேல் ஜாக்சன் கூட்டணி. இந்தியில ரிஷிகேஷ் முகர்ஜி - அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா-ஷாருக்கான். தமிழ்ல எஸ்.பி.முத்துராமன் - ரஜினிகாந்த், சிங்கீதம் சீனிவாசராவ் - கமல், சரண்-அஜீத்.... இப்படி சொல்லிட்டே போகலாம். இப்போ சமீபத்துல கூட விஜய்-அட்லீ காம்போ ரொம்ப நல்லா பண்றாங்க. 

இதுல சிலருக்கு முதல் படமே அந்த நடிகரோடயோ இல்ல இயக்குநரோடயோ அமைஞ்சிருக்கும். அது பின்னாடி பல படங்கள்ல தொடரும். அப்படி ஒரு கூட்டணிதான் வெற்றிமாறன் - தனுஷ். நான் உறுதியா சொல்வேன்... மேல நான் சொன்ன எந்தவொரு கூட்டணியை விடவும் ஒருபடி மேல தனுஷ்-வெற்றிமாறன் இருக்காங்கன்னு உறுதியா சொல்வேன். ஏன்னா அவங்க ரெண்டு பேர் சேர்ந்து கொடுத்த படங்கள் அப்படி. கொஞ்சம் விரிவா பார்ப்போம்.

நமக்கு நல்லா தெரிஞ்ச எஸ்.பி.எம் - ரஜினி காம்போவையே எடுத்துப்போம். அவங்க முரட்டுக்காளை மாதிரி பக்கா கமெர்ஷியலும் தந்திருக்காங்க. ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி படங்களும் தந்திருக்காங்க. ஆனா முரட்டுக்காளை படத்துல நாம ஆறிலிருந்து அறுபது வரை படத்துல இருந்த அம்சங்களை எதிர்பார்க்கமுடியாது.

மசாலான்னு மசாலாதான். சோகம்னா சோகம்தான். அது ஜெயிச்சது தோத்ததுங்கிறதை தாண்டி இதுல இது பண்ணமுடியாதுங்கிற ஒரு ரெஸ்ட்ரிக்ஷன் இருந்தது. அல்லது அப்படி நினைச்சிக்கிட்டாங்க.

இது வெறும் கதை அம்சத்துல மட்டும் இல்ல. கேமரா கோணங்கள், பின்னணி இசைன்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு பேட்டர்ன் வச்சிருந்தாங்க. அதை டிஸ்டர்ப் பண்ணாம படம் பண்ணி ஹிட், சுமார்ன்னு பல படங்கள் பண்ணாங்க. இதுலதான் வெற்றிமாறன்-தனுஷ் வேறுபாடுறாங்க. அது ஒரு கனாக்காலம் படம் தனுஷ் பாலு மஹிந்திரா கூட வேலை பார்க்கும்போது வெற்றிமாறன சந்திக்கிறார்.

கொஞ்சநாள்ல வெற்றிமாறன் கூட தேசிய நெடுஞ்சாலைன்னு ஒரு படம் ஆரம்பிக்கிறதா அறிவிப்பு வந்தது. அதுதான் பின்னாடி சித்தார்த் நடிச்சி வந்த NH4-உதயம்-ன்னு நினைக்கிறேன். இந்தப்படம் நடக்காம போனதுல ரெண்டுபேருக்கும் வருத்தம் இருந்தாலும் கூட வெற்றிமாறன் கொஞ்சம் நிறையாதான் கஷ்டப்பட்டாரு. அப்போ கூட இருந்து "நாம கண்டிப்பா படம் பண்ணுவோம் அது நல்லா வரும்"ன்னு தனுஷ் சொல்லிட்டே இருப்பாராம்.

அப்புறம் அவங்க ஆரம்பிச்சதுதான் பொல்லாதவன். பொல்லாதவன் எடுக்கும்போது பலர் இவங்க ரெண்டு பேர் காதுபட இது ஓடாதுன்னு சொன்ன சம்பவங்களும் கூட இருந்திருக்கு. ஆனா தனுஷ் வெற்றியை முழுசா நம்புனாரு. சின்ன சின்ன வணிக சமரசங்கள் வெற்றிமாறன் செய்யவேண்டிய கட்டாயத்துல இருந்தாரு. ரெண்டு பாடல்கள் அவரோட விருப்பமே இல்லாமதான் அவர் வச்சாரு. ஆனாலும் படம் க்ளாஸிக்கா அமைஞ்சதுக்கு காரணம் அந்த பரஸ்பர நம்பிக்கைதான்.

அந்தப்படம் பார்த்த பலரும் பரவலா சொன்ன ஒரு கமெண்ட்.."படம் செம மாஸா இருக்குடா.. ஆனா வித்தியாசமா இருக்கு..". இதுதான் வெற்றிமாறனோட படங்களோட ஸ்பெஷாலிட்டி. ஒரு வெயிட்டான கதையை எப்படி கமெர்ஷியலா சொல்லணும்ங்கிற அந்த வித்தை அவருக்கு தெரியும்.

ரெண்டுல ஒன்னு கொஞ்சம் கூடுனாலும் கூட படம் படுத்துரும். உதாரணமா ஆடுகளம் ரெண்டாவது பகுதி. முதல் பகுதியில அவ்ளோ பெரிய சேவல் சண்டை காட்சி இருக்கும். அது முடியும்போது செம மாஸா இருக்கும். இனி வில்லன்களுக்கும், தனுஷுக்கும் பெரிய சண்டை வரும்டான்னு நாம நினைக்கிறப்போ, அப்படியே பேட்டைக்காரனோட ஈகோ மற்றும் அதனால் வர்ற பிரச்சினைகளும்ன்னு படம் வேறொரு தளத்துல போகும்.

என்னதான் கிஷோருக்கும் தனுஷுக்கும் சண்டைக்காட்சிகள் இருந்தாலும் கூட, அதைவிட முக்கியமா பேட்டைக்காரன் என்ன பண்ணப்போறார் அடுத்து அபப்டிங்கிற எண்ணம்தான் மேலோங்கும். அதுலயும் குறிப்பா பேட்டைக்காரன் இறந்ததும் எல்லாத்தையும் அடிச்சி தூக்கிப்போட்டுட்டு இனிமே நான்தாண்டா அடுத்த பேட்டைக்காரன்ன்னு தனுஷ் அறிவிப்பார்ன்னு நினைச்சா, அதெல்லாம் எதுவுமே இல்லாம கத்தியை தூக்கி போட்டுட்டு தன்னோட காதலியோட யாருக்கும் தெரியாம ஊரை விட்டு போயிருவாரு..

அந்த காசை விட்டுட்டு. இந்தப்படத்துக்கு இப்படி ஒரு க்ளைமாக்ஸை வைக்க, ஒரு இயக்குனர் நினைக்கிறது சகஜம். ஆனா ஹீரோ அதை அனுமதிக்கணும். தன்னை முழுசா ஒப்புக்கொடுக்கணும். தனுஷ் அவ்ளோ பெரிய மாஸ் ஹீரோ இல்லைதான். ஆனா அவர் மாஸ் படமும் பண்ற ஒரு நடிகர். அவர் சில பல காரணங்கள் சொல்லி மறுத்திருக்கலாம். மாத்த வச்சிருக்கலாம். ஆனா அவர் வெற்றிமாறனை நம்பினார். 

இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா வடசென்னை. அது ஆரம்பிக்க முன்னாடி தான் ஒரு சின்னப்படம் பண்ணாதான் சரியா இருக்கும்னும், தனக்கு அதுக்கான பிரேக் வேணும்னும் வெற்றிமாறன் சொன்னப்போ அதுக்கான நேரம் தந்தது மட்டுமில்லாம அந்த படத்தை தயாரிக்கவும் செஞ்சாரு தனுஷ்.

இதுதான் அந்த புரிதலோட உச்சக்கட்டம். ஏன்னா வடசென்னை எவ்ளோ பெரிய படம்னு தனுஷுக்கு தெரியும். மினிமம் ரெண்டு வருஷ உழைப்பு தேவைப்படும் ஒரு படத்துக்கு. மூணு பாகம்னா அது எவ்ளோ பெரிய உழைப்பை கோரும்னு புரிஞ்சி, அதுக்கான இடைவெளியை உருவாக்கி தந்தாரு.

வடசென்னை வந்தது. அந்த படத்தோட எடிட்டிங்கே சொல்லும் படம் எந்தமாதிரியான உழைப்பை கொண்டதுன்னு. நிதானமா பொறுமையா ஏறுற போதை மாதிரி இருந்தது அந்தப்படம். தியேட்டர்ல ரெண்டு தடவை பார்த்துட்டு, அப்புறம் ஹாட்ஸ்டார்-ல ஒரு மூணு தடவ பார்த்திருப்பேன். ஒவ்வொருவாட்டியும் வேறுமாதிரியான ஒரு கோணத்தையும், புரிதலையும் அந்தப்படமா கொடுக்கும்.

அதுதான் உண்மையான் வெற்றி. இது வெற்றிமாறனோட ஒவ்வொரு படத்துக்கும் பொருந்தும். விசாரணை மட்டும் என்னால ஒரு தடவைக்கு மேல பார்க்கமுடியல. ஏனோ பயமா இருக்கும். ஆனா பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மூணுமே நான் சும்மா போரடிச்சா பார்க்குற படங்கள். அதுலயும் ஆடுகளம் முதற்பகுதி மட்டுமே நாலஞ்சி தடவ பார்த்திருக்கேன். கரெக்ட்டா சேவல் சண்டை முடிஞ்சதும் நிறுத்திருவேன். வடசென்னை அப்படி இல்ல. ஆரம்பிச்சா முழுசா பார்க்காம தூக்கம் வராது. 

வெறும் மூணே படம்தான் இதுவரைக்கும் வந்திருக்கு. ஆனா தி பெஸ்ட் கோம்போ-ன்னு நான் சொல்வேன். அசுரன் பார்க்கிறதுக்கு ஒரு முன்னோட்டமா இந்த கட்டுரையை வச்சிக்கலாம்.

ஆய்வு & கட்டுரை : பாலகிருஷ்ணன்.