18 மாநிலங்களில் ஜீரோ! ராகுல் தலைமையில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்!

நாடாளுமன்ற தேர்தலில் 18 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.


மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக தனித்து 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக  கூட்டணி கட்சிகள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி ஒட்டு மொத்தமாக வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் எதிர்கட்சி அந்தஸ்தை பெற முடியாத சூழல் உள்ளது. இதனிடையே சுமார் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள பகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

பெரிய மாநிலங்களை பொறுத்தவரை ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை. இதே போல் காஷ்மீர், இமாச்சல், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அந்தமான், நிகோபார், டாட்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத் தீவுகள், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் மற்றும் திரிபுராவிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை.