குளியல் அறையில் ரத்த வெள்ளத்தில் காங்கிரஸ் பெண் தலைவர்! பதற வைக்கும் சம்பவம்!

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு நிர்வாகி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் என்ஜிஜிஓ காலனி பகுதியில் வசித்து வந்தவர் விஜயாரெட்டி. இவரது கணவர் பி.விஷ்ணு ரெட்டி, பொதுத்துறை வங்கி அதிகாரி. 

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர், ஐதராபாத்தில் வசித்து வருகிறார். கணவருடன் தனிமையில் என்ஜிஜிஓ காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விஜயா ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், அவர் தனது வீட்டில் கதவு பூட்டிய நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற திங்கள்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெளியே செல்வதாகவும், வீட்டுக்கு வர தாமதம் ஆகும் எனவும் விஜயாவின் மொபைலில் இருந்து, அவரது கணவருக்கு, அன்றைய தினம் மெசேஜ் வந்துள்ளது. 

இதையடுத்து, வேலை முடிந்ததும் வீடு திரும்பிய விஜயாவின் கணவர் விஷ்ணு ரெட்டி, கதவு பூட்டியிருந்த காரணத்தால், தனது உறவினர் வீட்டில் சென்று தங்கியுள்ளார்.  

 ஆனால், அடுத்த நாள் விடிந்த பிறகும் விஜயா வீடு திரும்பவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால், விஷ்ணு ரெட்டிக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதன்பேரில், உடனடியாக, வீட்டுக்கு விரைந்த அவர், தன்னிடம் இருந்த மற்றொரு சாவியை எடுத்து, பூட்டை திறந்துள்ளார்.

உள்ளே, குளியலறையில் மனைவி விஜயா, ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், வீட்டில் சிசிடிவி கேமிரா வேலை செய்யாததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், விஜயாவின் அபார்ட்மென்டை விலைக்கு வாங்குவது தொடர்பாக, ஒரு ஆணும், பெண்ணும் சில நாட்கள் முன்பாக, அவரை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியதாக, போலீசாருக்கு தெரியவந்தது. 

ஒருவேளை, அந்த 2 பேரும் விஜயாவை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். விஜயாவின் கணவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.