தேய்ந்து போன செருப்பு! கார்த்தியின் கைதி! காங்., பிரமுகர் மனைவி கொடூர கொலையில் துலங்கிய துப்பு! திருவாரூர் டென்சன்!

திருத்துறைப்பூண்டியில் காங்கிரசு பிரமுகரின் மனைவியை கொலை செய்துவிட்டு பணத்தை திருடி சென்ற கொலையாளியை 6 மணி நேரத்திற்குள் மடக்கி பிடித்தனர் காவல்துறையினர்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் காங்கிரசு பிரமுகர் ராமச்சந்திரன், இவரது மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு மகன், மகள் இருவர் உள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு பிறகு தனியாக வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை திருத்துறைப்பூண்டி வரை சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமச்சந்திரன் வீட்டில் மனைவி கழுத்தறுபட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த பணத்தையும் காணவில்லை.  

தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வீட்டை சோதனையிட்டனர். வீட்டிற்கு வெளியே தேய்ந்த செருப்பு கிடைத்தது. அதை வைத்து விசாரிக்கையில், இது ராமச்சந்திரனின் துணிக்கு சலவை செய்து அன்றாடம் துணி கொடுக்க வரும் முருகானந்தத்தின் செருப்பு என தெரியவந்துள்ளது. 

முருகானந்தம் எங்கே என தேடியபோது, அவன் கைதி திரைப்படம் பார்க்க சென்றதாக கூறியுள்ளனர். நள்ளிரவு படம் பார்த்துவிட்டு திரையரங்கம் விட்டு வெளியே வந்த முருகானந்ததை மடக்கி பிடித்தனர் போலீசார்.  

அப்போது முருகானந்தம் செருப்பு இல்லாமலும், கையில் நிறைய பணமும் வைத்திருந்ததால், போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. அவனை பிடித்து விசாரித்தபோது, வழக்கம் போல சலவை துணி கொடுக்க ராமச்சந்திரனின் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் இருந்த ராஜலட்சுமி பீரோவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு இருந்தார். இதைக்கண்ட முருகானந்தம் பணத்திற்கு ஆசைப்பட்டு மேஜையில் இருந்த கத்தியை எடுத்து ராஜலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.  

பின்னர், செய்வது அறியாது செருப்பை அங்கேயே விட்டுவிட்டு, கைதி படம்பார்க்க சென்றுள்ளான் என்பதும் அம்பலம் ஆகியது. சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.