ராகுல் பேச்சு மொழி பெயர்ப்பு! காங்கிரஸ் காரர்களை கழட்டிவிட்டு திமுகவிடம் கடன் வாங்கிய பரிதாபம்!

கடந்த முறை ராகுல் தமிழகம் வந்தபோது, தங்கபாலு மொழிபெயர்ப்பு செய்த விவகாரம் அமெரிக்கா வரையிலும் பேசப்பட்டது. இத்தனை புத்திசாலித்தனமான மொழிபெயர்ப்பாளரா என்று உலகமே வியந்து பாராட்டியது.(?)


இன்று மீண்டும் ராகுல் கிருஷ்ணகிரி வந்தபோது, தங்கபாலுதான் மொழிபெயர்ப்பு செய்வார் என்று கருதப்பட்டது. ஆனால், தங்கபாலுக்குப் பதிலாக காந்திகிராம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பழனிதுரை மொழிபெயர்ப்பு செய்தார். ராகுல் பேசுவதை அப்படியே அச்சுஅசலாக மொழிபெயர்க்க முடிவு செய்து பழனிதுரையும் தோற்றுப் போனார். 

முன்பு தூர்தர்சன் நாடகங்களில் மும்பை டப்பிங் சீரியல்களுக்கு பேசப்படுவது போல் பேசினார் பழனிதுரை. அதனால் டென்ஷனான ராகுல், இத்தனை பெரிய தமிழ்நாட்டில் சரியாக மொழிபெயர்க்க யாருமே இல்லையா என்று கேட்டார். அதுக்குத்தான் தங்கபாலுவே இருக்கட்டும் என்று பலரும் சொல்ல, அதை ராகுல் ஏற்கவில்லை.

இந்த விவகாரம் அறிந்த ஸ்டாலினே ராகுலுக்குக் கை கொடுத்தார். அதனால் சேலம் மீட்டிங்கில் ராகுல் பேச்சை டி.கே.எஸ்..இளங்கோவன் மொழிபெயர்ப்பு செய்தார். சூப்பரப்பு என்று சொல்லும் வகையில் ராகுல் பேச்சை அழகாகப் பேசி அனைவரிடமும் கைதட்டல் வாங்கிவிட்டார் இளங்கோவன்.

மொழிபெயர்ப்பு என்பது, ஒருவர் பேசுவதை அப்படியே ஒப்பிப்பது இல்லை, அதனை மண்ணின் மணத்துடன், மண்ணின் மொழியில் எடுத்துச்சொல்வது. அதைத்தான் மிகச்சரியாக செய்துவிட்டார் இளங்கோவன். ஆனால், இத்தாம் பெரிய காங்கிரஸ் கட்சியில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு யாருமே இல்லை என்று, அதையும் தி.மு.க.விடம் காண்ட்ராக்ட் கொடுத்ததுதான் படுசோகம்.