மூடிய அறைக்குள் சம்பூர்ணம் 3 மணி நேரம் என்ன செய்தார்? கொந்தளிக்கும் கம்யூனிஸ்ட்! ஜாலி ராஜன் செல்லப்பா!

வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு இருப்பதாக ஏற்கெனவே எதிர்க் கட்சிகள் பொங்கிவரும் வேளையில், மதுரையில் சம்பூர்ணம் செய்த லீலை அத்தனை எதிர்க் கட்சிகளையும் அலற வைத்துள்ளது.


மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்குள் சம்பூர்ணம் என்கிற வட்டாட்சியரும் மேலும் மூன்று நபர்களும் கிட்டத்தட்ட  மூன்று மணி நேரம் இருந்த விவகாரம் படு சூடாக போய்க்கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிக்கை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளது. 

1. ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அறையை முத்திரையிட வேண்டாம் என உத்தரவிட்டது யார்?. 

2. சட்டவிரோதமாக ஆவண அறைக்குள் புகுந்த அலுவலருக்கும், அவருடன் சென்றவர்களுக்கும், அறையை திறப்பதற்கும் ஆவணங்களை எடுப்பதற்கும் உத்தரவிட்டவர்கள் யார்?. யாரும் அவருக்கு உத்தரவிடவில்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர் யாருக்கும் தெரியாமல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதன் உள்நோக்கம் என்ன?.

3. மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் செல்வதும், அதை மூன்று மணி நேரம் வரை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் எப்படி? ஆகிய கேள்விகள் முக்கியமானவை.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்பில்லை. இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த பிறகும், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுரையிலேயே இருந்த போதும், சம்பவ இடத்திற்கு வராததும், சில மணி நேரங்களுக்கு பின்பு வேட்பாளர் சு. வெங்கடேசன் சொன்ன பிறகு தான் இந்த பிரச்சனையே தனக்கு தெரியும் என்று சொன்னதும் ஆச்சரியமளிக்கிறது.

எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளை தலைமை தேர்தல் அதிகாரி உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென கோருகிறோம்:

1. நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 

2. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

4. மதுரை நாடாளுமன்ற தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு முழுiமான துணை ராணுவ பாதுகாப்பு  ஏற்பாடு செய்திட வேண்டும்.

5. தபால் வாக்குகள் விநியோகம், பதிவு, எண்ணிக்கை ஆகியவை குறித்து சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

மேற்கண்ட கோரிக்கைகள் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே, தாங்கள் இந்த கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கு விளக்கமளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் சீல் வைக்கப்பட்ட அறைக்குள் செல்லவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதெல்லாம் சாதாரண விவகாரம் என்று ராஜன் செல்லப்பாவும், அவர் மகனும் குரல் கொடுப்பதைப் பார்த்தால், நிலைமை சீரியஸ் என்றேதான் தெரிகிறது.