வைரமுத்துவை இப்படி அவமானம் செய்யலாமா? டென்ஷன் ஆகும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் ஆர்வலர்கள்!

ஆண்டாளின் பெயரையும் பாடகி சின்மயி பேரையும் சொல்லி, வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் விட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கவிஞர் வைரமுத்துவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டம் வழங்குவதாக அழைப்பிதழும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக பாஜகவினரும், இந்துத்துவ மதவெறி சக்திகளும் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவிற்கு வராமல் ரத்து செய்துள்ளதும், இதனால் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடைபட்டுள்ளதும் அறிய முடிகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. 

கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது, விருது வழங்குவது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக கல்வி நிர்வாகங்களுக்கு உரிமையுண்டு. பல்வேறு துறைகளில் சாதித்துள்ள துறை வல்லுநர்களுக்கு அவர்கள் சாதித்துள்ள சாதனைகள் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் தலையிடுவது பொருத்தமானதல்ல. அத்தகைய நடைமுறைகள் அதிகரிக்குமானால் பல்கலைக்கழகங்களின் சுயாட்சித் தன்மை பாதிப்புக்குள்ளாகும்.

இதுமட்டுமல்லாது கவிஞர் வைரமுத்து அவர்கள், தமிழ் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளை ஆற்றியுள்ளார். திரைப்பட உலகில் பாடலாசிரியராக தனி முத்திரைப் பதித்தவர். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவெடுத்தது பொருத்தமானதே. தனிப்பட்ட நபர் என்பதை விட தமிழ்மொழிக்கு சேவை செய்திருக்கிற ஒரு கவிஞர் என்கிற வகையில் அவரது பங்களிப்பினை கௌரவப்படுத்துவது சரியானதே.

தொடர்ந்து தமிழ்மொழிக்கு எதிராகவும், தமிழ் பண்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் தொடர் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

பல்கலைக்கழக மற்றும் கல்வித்துறை செயல்பாடுகளில் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளின் தலையீடு அபாயகரமானது என்பதையும், தமிழக ஜனநாயக சக்திகள் இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

அதேபோன்று பேராசிரியர், அருணன் மற்றும் உதயகுமாரும் இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருவதாக இருந்தது. ஆனால் திடீரென தனது வருகையை ரத்து செய்துள்ளார் அவர்.

இதன் பின்னணியில் தமிழக பாஜக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆண்டாள் பற்றிய தனது கட்டுரையில் ஓர் ஆய்வு முடிவினை மேற்கோள் காட்டியதற்காக அன்று அவர் மீது பாய்ந்தனர் பாஜக தலைவர்கள். சநாதன நோக்கிலிருந்தும், மதவெறி போக்கிலிருந்தும் அவர்கள் அந்தத் தாக்குதலைத் தொடுத்தனர். அது கருத்துரிமை மீதும், ஆய்வுரிமை மீதும் வீசப்பட்ட வெட்டரிவாளாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே டாக்டர் பட்டம் வழங்கும் விழாவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வரக்கூடாது என்று வம்பு செய்து அவரைத் தடுத்திருக்கிறார்கள். அவரும் அதற்குப் பணிந்து தனது பங்கேற்பை ரத்து செய்திருக்கிறார். இந்திய நாட்டின் மத்திய அமைச்சர் ஒரு கட்சிக்காரராக மாறி நமது தமிழ்க்கவியை அவமானப்படுத்த முனைந்திருக்கிறார்

நம் தமிழ்க்கவி வைரமுத்துவுக்கு மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவும் செய்துள்ள இந்த அநீதி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு செய்யப்பட்டுள்ள அநீதியாகும். பழமைவாத மற்றும் வகுப்புவாத நோக்கிலிருந்து இழைக்கப்பட்டுள்ள இந்த அநியாயத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.

பாஜகவானது தமிழ் இலக்கியவாதிகளுக்கும் அவர்தம் சுதந்திரச் சிந்தனைக்கும் எதிரானது என்பதை மேடை சுட்டிக்காட்டுகிறது. நமது விமர்சனபூர்வ ஆய்வு மரபைக் கட்டிக் காப்பதற்காக பாஜகவின் மதவெறிப் போக்கை எதிர்த்துப் போராட முன்வருமாறு அனைத்து மனிதநேயர்களையும் அது அறைகூவி அழைக்கிறது. என்று தெரிவித்து உள்ளனர்.