நீட் போன்று பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வருகிறதா? கொந்தளிக்கும்- கம்யூனிஸ்ட் கட்சி!

ஒரே ஒரு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு நாட்டில் ஏராளமான பிரச்னைகள், தற்கொலைகள், மோசடிகள் நடந்துவருகிறது.


இந்த நிலையில் ‘நாடு முழுவதும் அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும்’ என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் அறிவித்துள்ளார். 

இந்த விவகாரத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் பா.ஜ.க. மத்திய அரசு, மனித சமூகத்தை பிளவு படுத்தும் ‘மனு தர்ம’ சிந்தனையின் நவீன வடிவமாகும்.

இதன் மூலம் பெரும் பகுதி மக்களின் கல்வி உரிமையினை பறித்து விட மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசின் பிற்போக்குத் தனமான சிந்தனையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கனவே 5ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 10.ஆம் வகுப்பு மற்றும் +2 என பல கட்டங்களில் பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் அடித்தட்டு, உழைக்கும் மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

கல்வியின் தரத்தையும், திறனையும் உயர்த்திட ‘நீட்’ போன்ற தேர்வுகள் பயனளிக்கவில்லை என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது. நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி பயிற்சி மையங்கள் புற்றீசல்களாக பெருகி, லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்க மட்டுமே பயன் படுகிறது. இது மத்திய அரசு அனுமதித்துள்ள சட்டப்பூர்வ கொள்ளையாகும்.

தற்போது உள்ள நிலையில் ஆரம்பக் கல்வியில் சேருவோரில் 75 சதவீதம் பேர் உயர் கல்விக்கு வர இயலாத நிலை தொடர்கிறது. இதனை மாற்றி, பெரும் பகுதியினர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்தும் வழிவகை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வு உட்பட அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார் முத்தரசன்.