கடந்த தேர்தலில் கேரளாவில் பா.ஜ.க. ஜெயிக்க முடியாமல் போனதற்கு, அய்யப்பன் கோயில் விவகாரத்தை பா.ஜ.க. சரியாக கையாளவில்லை என்று சொல்லப்பட்டது.
அய்யப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை கேட்கும் கம்யூனிஸ்ட்! பலே பா.ஜ.க. பிளான்!
அதற்கு பரிகாரம் போன்று இப்போதே விவகாரத்தைக் கையில் எடுத்துவிட்டது பா.ஜ.க. அதுவும் கம்யூனிஸ்ட் எம்.பி. ஒருவர் மூலம் இந்தப் பிரச்னையை எழுப்ப, எதிர்க்கட்சிகள் கலங்கிப்போய் நிற்கின்றன. இதுகுறித்து கோபால்ஜி எழுதியிருப்பதைப் பாருங்கள். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஐயப்பனின் சன்னிதானத்துக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்பது சபரிமலையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த வழிமுறை. ஆனால், இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்று சொல்லி, சபரிமலை வழிபாட்டுக்கே சம்பந்தமில்லாத ஒரு வக்கீல்களின் குழு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கி 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இந்துக்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்பதால் அதை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளும் முன்வைத்தன. ஆனால், மேல்முறையீடு செய்ய கேரள அரசு மறுத்தது. இதனால் போராட்டம் வெடித்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வளவு அதிருப்தியை சந்திப்பது ஏன் என்று கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கலகக்குரல் எழுந்தது.
ஆனால், இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமானால், இந்துக்கள் ஓட்டு காங்கிரசுக்கு போகாமல் பா.ஜ.க.வுக்கு பிரியும். எதிர்ப்பு ஓட்டுகளை காங்கிரசும் பா..ஜ.க.வும் பிரித்துக் கொண்டால் நம்முடைய பாரம்பரியமான ஓட்டுகள் நமக்கு கிடைக்கும்; எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று கணக்கு போட்ட கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை போராட்டத்தை அணையாமல் பார்த்துக் கொண்டது. தீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்ற பெயரிலும், போராட்டக்காரர்களை ஒடுக்குகிறேன் என்ற பெயரிலும் ஐயப்ப பக்தர்களையும் இந்துக்களையும் எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிவுபடுத்தியது.
தேர்தல் முடிவுக்கு பிறகு, காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன், கம்யூனிஸ்ட்களில் ஒரு பிரிவான புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியில் இருந்து வெற்றிபெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான பிரேமசந்திரன், 17வது லோக்சபாவின் முதல் தனிநபர் மசோதாவை கொண்டுவர நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். ‘சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் (சிறப்பு ஏற்பாடு) மசோதா 2019’ என்று பெயரிட்டுள்ள அந்த மசோதாவில் சபரிமலையின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்; 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்வதற்கு வழக்கத்தில் இருந்த தடை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காலம் கடந்து வந்த ஞானமாக இருந்தாலும், செய்த தவறை உணர்ந்து அதற்கு பரிகாரமாக பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டுவந்த எம்பிக்கு பாராட்டுக்கள். இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்து தீர்மானம் நிறைவேறவிடாமல் தடுக்க அவர் சார்ந்த கூட்டணிக்கு லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் நாதியில்லை என்பது கூடுதல் ஆறுதல். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சபரிமலை பிரச்னைக்கு புதிய சட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும். அய்யப்பன் கோயிலிலும் இனி பா.ஜ.க. ராஜ்யம்தான்.