ஒரு நாட்டுக்கே அதிபரான நகைச்சுவை நடிகர்! கடின உழைப்பிற்கு அங்கீகாரம்!

அரசியல் அனுபவம் ஏதும் இல்லாத நகைச்சுவை நடிகர் ஒருவர் உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.


ரஷ்யா அருகே உள்ள உக்ரைனில் செர்வண்ட் ஆப் த என்ற டிவி தொடர் வெகு பிரபலம். அந்த தொடரில் நேர்மையான ஆசிரியராக இருக்கும் ஒருவர்  கடினமான உழைப்பால் அதிபராக தேர்வு செய்யப்படும் வேடத்தில் வொலோடிமைர் ஜெலன்ஸ்கி என்பவர் நடித்திருப்பார்.

நகைச்சுவை கதாபாத்திரமான இதில் வொலோடிமைர் ஜெலன்ஸ்கி பின்னி பெடல் எடுத்திருப்பார். இந்த ஒரே ஒரு டிவி தொடர் மூலம் உக்ரைனின் பட்டி தொட்டி எங்கும் வொலோடிமைர் ஜெலன்ஸ்கி பிரபலம்.

தொலைக்காட்சி தொடரில் எப்படி ஆசிரியராக இருந்து அதிபராக வொலோடிமைர் ஜெலன்ஸ்கி  முன்னேறுவாரோ அதே போல் காமெடி நடிகராக இருந்து உக்ரைன் அதிபராக ஆக வேண்டும் என்று வொலோடிமைர் ஜெலன்ஸ்கிக்கு விருப்பம் வந்துள்ளது.

இதனை அடுத்து உக்ரைன் அதிபர் தேர்தலில் வொலோடிமைர் ஜெலன்ஸ்கி  களம் இறங்கினார். நடந்து முடிந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள பெட்ரோ போரோசென்கோவை எதிர்த்தும் அவர் போட்டியிட்டார். முடிவுகள் வெளியான நிலையில் பதிவான வாக்குகளில் 75 சதவீத வாக்குகளை வொலோடிமைர் ஜெலன்ஸ்கி பெற்று வெற்றி பெற்றார்.

உக்ரைனின் அடுத்த அதிபராக நகைச்சுவை நடிகரான வொலோடிமைர் ஜெலன்ஸ்கி பொறுப்பேற்க உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.