நைசா பேசி பெண்களை வலையில் வீழ்த்துவான்! பயிற்சியாளர் மகன் மீது கபடி வீராங்கனை புகார்!

கோவையில் கபடி பயில வந்த கல்லூரி மணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை ராஜவீதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை வணிகவியல் பயின்று வருகிறார். கபடி வீராங்கனையான இவர், சுந்தராபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் மாலை நேரங்களில் இலவசமாக கபடி பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் விஸ்வநாதனின் மகன் சஞ்சீவ்குமார், அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக அவன் மிரட்டல் விடுத்ததாகவும், அவனுக்கு அவனது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாகவும் மாணவி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சஞ்சீவ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவியின் வீட்டிற்கு சென்ற சஞ்சீவ்குமாரின் உறவினர்கள், புகாரை திரும்பப் பெற வலியுறுத்தி, தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு உரிய பாதுகாப்பளிக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.