கல்லூரியின் 2 வது மாடியில் இருந்து பிரியாவை தள்ளிவிட்டுடாங்க! செங்கல்பட்டு பெண்கள் கல்லூரியின் திகுதிகு சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரி மாடியில் இருந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரி 2வது நாளாக போராடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா என்பவர் செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் செயல்படும் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார். நாள்தோறும் விழுப்புரம் சென்று வரமுடியாது என்பதால் கல்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்.

நவம்பர் 13-ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் இரண்டாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் விழுந்துள்ளார் கிருஷ்ணபிரியா. உடனடியாக சகமாணவிகளால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சென்ற போலீசாரை கல்லூரி வளாகத்திற்கு காவலாளிகள் அனுமதிக்கவில்லை. கல்லூரி நிர்வாகமும் செல்போனை அணைத்துவிட்டதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் மறுநாள் காலையில் காவல்துறை அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தினரை தொடர்புகொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்த சம்பவத்தைக் காவல்துறைக்கு தெரிவிக்காததும், கல்லூரி நிர்வாகிகள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ததும் பெற்றோர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மாடியில் இருந்து தவறிதான் விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளி விட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என சர்ச்சை வெளியான நிலையில் அடுத்து மேலும் ஒரு மாணவி உயிரிழந்துள்ளது கல்லூரிகளுக்கு பிள்ளைகளை அனுப்பலாமா வேண்டாமா என்ற அச்சம் அனைத்து பெற்றோரையும் தொற்றிக்கொண்டுள்ளது. மேலும் மாணவி உயிரிழப்பு சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் 2வது நாளாக போராடி வருகின்றனர்.