மின்னல் வேகத்தில் சென்ற தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து..! திடீரென கழன்று விழுந்த டீசல் டேங்க்! விருத்தாசலம் பரபரப்பு!

தனியார் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென டீசல் டேங்க் கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் காயம் இன்றி தப்பினர்


பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 

பெண்ணாடம் அருகே கல்லூரி பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின் அடிப்பகுதியில் பொறுத்தப்பட்டிருக்கும் டீசல் டேங்க் கழன்று சாலையில் விழுந்தது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரத்தில் நிறுத்தி கல்லூரி மாணவர்களை காப்பாற்றினார்.

பின்னர் மாணவர்கள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மாற்றுப் பேருந்தில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கல்லூரி பேருந்தை அவ்வப்போது பராமரித்தால் இதுபோன்ற சம்பவம் நிகழாது என மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், வருடா வருடம் பள்ளி, கல்லூரி பேருந்துகளை ஆய்வு செய்யும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்திருந்தால் இதுபோன்ற விபத்துகள் நிகழாது என்பதே அனைவரின் விருப்பம்.