குட்டையின் ஆழமான பகுதியில் டிக்டாக்..! சடலமாக மிதந்த இளைஞன்! செல்போனை ஆராய்ந்த போது அம்பலமான மர்மம்!

டிக் டாக் வீடியோ எடுக்கச் சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவை அருகே நிகழ்ந்துள்ளது.


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. தறி தொழிலாளியான இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். விக்னேஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கருமத்தம்பட்டி அருகே இருக்கும் வடுகபாளையம் குட்டையில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.  

குளித்து முடித்த பிறகு, தனது செல்போனை எடுத்துக்கொண்டு குட்டையின் ஆழமான பகுதியை நோக்கி சென்ற விக்னேஸ்வரன் திடீரென தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உள்ளார். இதைக் கண்ட நண்பர்கள் பதறியடித்துக்கொண்டு காப்பாற்ற முயற்சித்த போது நீரில் மூழ்கி விக்னேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.  

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில மணிநேரம் போராடி விக்னேஸ்வரனின் சடலம் மீட்கப்பட்டது.  இதனையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஸ்வரனின் செல்போனை எடுத்துப் பார்க்கையில், முதலில் குட்டையின் மேல் பகுதியில் நின்று டிக் டாக் வீடியோ எடுத்திருக்கிறார். பின்னர் மேலும் ஆர்வம் ஏற்பட்டதால் குளத்தின் ஆழமான பகுதியைநோக்கி சென்று டிக் டாக் எடுக்க முயற்சித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது.  

விக்னேஸ்வரனை பிரிந்த குடும்பத்தினர் தற்போது பெரும் சோகத்தில் இருக்கின்றனர்.