அது வெறும் உடம்பு தான்! காதலன் வீடியோ எடுத்து மிரட்டினால் பயப்படாதே! மகளுக்கு தாய் கூறிய நச் அறிவுரை!

கோவை: பொள்ளாச்சி சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், 'அம்மாவை கட்டிப்பிடிச்சி அழனும் போல இருந்தது,' என, இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.


பொள்ளாச்சியில், அதிமுக கட்சி உறுப்பினர் உள்ளிட்ட பலர் 200க்கும் அதிகமான இளம்பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அவற்றை படம் பிடித்து, வீடியோவாக மற்றவர்களுக்கு பகிர்ந்தும் வந்துள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வீடியோ காட்சி 2 நாட்கள் முன்பாக, வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கோவையை சேர்ந்த நர்மதா மூர்த்தி என்ற இளம்பெண், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது: 

கோயம்பத்தூரை சேர்ந்த நான், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவத்துக்கு பிறகு, வழக்கமாக வீட்டில் இருந்து வரும் போன்காலில் பத்தரமா இருந்துக்கோமா, ஆண் நண்பர்களோடு வெளிய போகதே, இதுபோன்ற அறிவுரைகள் வரும் என எதிர் பார்த்தேன்.

ஆனால் எனக்கு போன் செய்த எனது அம்மா, ‘எனக்கு தெரியும் நீ தைரியமானவள் என்று. என்ன நடந்தாலும் அம்மாவும், அப்பாவும் உன் கூடவே இருப்போம். எதாவது போட்டோவே அல்லது வீடியோ வைத்து உன்னை மிரட்டினால் அதைக் கண்டுப் பயப்படாதே. இதை நாம் தைரியமாக எதிர்கொள்வோம். ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை. எது நடந்தாலும் ஒரு பெற்றோராய் எப்போதும் உன் கூடவே இருப்போம்’.

‘என் அம்மா சொன்ன இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் என தோன்றியது. என்ன நடந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பெற்றோரைவிட வலிமையான ஒன்று இருந்துவிடமுடியாது’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு படிப்போரை நெகிழச் செய்வதாக உள்ளதை தொடர்ந்து,

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.