கிறிஸ்தவ மாணவர்களை மட்டும் தான் சேர்ப்போம்! கோவை நிர்மலமாதா பள்ளியின் அறிவிப்பால் அதிர்ச்சி!

கோவையில் ஒரு பள்ளியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


கோவை குனியமுத்தூரில் உள்ள ஞானபுரம் நிர்மலமாதா கான்வெண்ட் என்ற பெயரில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றுசெயல்பட்டு வருகிறது.  இந்தப் பதவியில் பல்வேறு மதங்களையும் சேர்ந்த மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்ட அறிவிப்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்த குழந்தைகளுக்கு மட்டுமே எல்.கே.ஜி. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. இது மக்களிடையே அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அப்போது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரை பள்ளிக்கு அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார். 
இந்நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர் அய்யண்ணன் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் சார்பில் மன்னிப்புக் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான மாணவர்கள் வருவதைத் தவிர்க்கவே அவ்வாறு அறிவிப்பு ஒட்டப்பட்டதாக பள்ளியின் முதல்வர் சுனா விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அந்த பள்ளி மத வெறியுடன் நடந்து கொண்டதாக கூறி இந்து அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளன.