10 வீடுகளில் மயங்கி விழுந்து பலியான வளர்ப்பு நாய்கள்! கோவையில் மரண பீதி!

கோவை அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட செல்லபிராணி நாய்கள் ஒரே சமயத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குறிஞ்சி நகர், சபரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக பொதுமக்கள் அதிகமாக வீடுகள் வாங்கி குடியேறி வருகின்றனர்.

இந்த பகுதியில் ஒரு  வீட்டிற்க்கும் மற்றொரு வீட்டிற்க்குமான இடைவெளி அதிகமாகவுள்ளது.எனவே பாதுகாப்பு கருதி அங்குள்ள  வீடுகளிலும் நாய்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு வீட்டில் இருந்த நாயும் ஒன்றன் பின் ஒன்றாக செத்து விழுந்த சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக இறந்த நாய்களின் அருகே சிறு சிறு கறித்துண்டுகள் கிடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதில் விஷம் கலந்து கொடுக்கபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கபடுகிறது. 

இதனை அடுத்து தகவலறிந்து வந்த பேரூராட்சி அதிகாரிகள் இறந்த நாய்களின் உடல்களை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் இந்த நாய்களை ஒழித்து கட்ட வேண்டி இப்படி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டி காவல் துறையினரிடம்  கோரிக்கை வைத்துள்ளனர்.