மனைவியை இழந்த தோழர் ரமேஷ்க்கு துணை நிற்போம்! குடிகாரர்களை ஓரம் கட்டுவோம்!

கோவை கணுவாய் பகுதியில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் உடலை நடுரோட்டில் வைத்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மருத்துவர் ரமேஷ்.


இவர் அப்பகுதியில் பொது சேவைகளையும் மக்களுக்காக செய்து வருபவர். இந்நிலையில் அவர் அப்பகுதியில் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்து வந்துள்ளார். வசதி இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 

கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் வசித்து வரும் இவருக்கு ஷோபனா என்ற மனைவியும் சாந்திதேவி என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் காலையில் நேரமே மருத்துவமனைக்கு சென்று விடுவதால் ஷோபனா தான் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதும் திரும்ப மாலையில் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு அழைத்து வருவார்.

சாந்திதேவி அருகிலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து ஷோபனா சாந்திதேவியை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், அப்போது வரும் வழியில் மது போதையில் தாறுமாறாக வண்டி ஓட்டி வந்த ஒரு நபர் தனது இரு சக்கர வாகனத்தை ஷோபனா மற்றும் அவரது மகள் சாந்திதேவி சென்ற வாகனத்தின் மீது வேகமாக மோதி உள்ளார்.

இதனால் ஷோபனா மற்றும் சாந்தி தேவி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு ஷோபனாவிற்கு பலமான தலையில் அடிபட்டது இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

அவரது மகள் சாந்திதேவிக்கு சிறு சிறு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் டாக்டர் ரமேஷ்க்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரமேஷ் தன் மனைவியின் இறந்த உடலை கட்டிப்பிடித்தபடி கதறி அழுதுள்ளார்.

தன் மகள் உயிருக்கு போராடும் நிலையிலும் தன் மனைவியின் உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதுள்ளார். பின்னர் காவல் துறையினர் சாந்திதேவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் அப்பகுதியில் கூட்டம் கூடியது இந்நிலையில் ரமேஷ் மனைவியின் இறந்த உடலை வைத்துக்கொண்டு "டாஸ்மாக்கை இழுத்து மூடுங்கள்" இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக கூட்டத்திலிருந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றும் விபத்துக்குக் காரணமான நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய நபர் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என தெரியவந்தது இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 4 மணி நேரம் போராட்டம்  நடக்கவே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தது அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் விபத்து ஏற்படுத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தப்படும் என கூறிய பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது. பின்னர் இறந்த ஷோபனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.