கிறிஸ்தவர்கள் திடீர் தாக்குதல்! இஸ்லாமியர் கடைகள், வீடுகளுக்கு தீ வைப்பு! பதற்றம்!

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள் சிலர் முஸ்லீம் மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.


கொழும்புவில் இருந்து 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சில், கடந்த ஏப்ரல் 21ம் தேதி முஸ்லீம் தற்கொலைப் படையினர் நடத்திய குண்டுவெடிப்பில், 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால், நெகாம்பு பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அருகே உள்ள முஸ்லீம்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இதன்பேரில், நேற்றிரவு (ஞாயிறு) திடீரென நெகாம்பு பகுதியில் உள்ள முஸ்லீம்களின் குடியிருப்புகள், அங்காடிகள் மீது, கிறிஸ்தவ மக்கள் கூட்டமாகச் சென்று, தாக்குதல் நடத்தியுள்ளனர். முஸ்லீம் வணிக நிறுவனங்கள், வீடுகள் மீது கல் வீசி தாக்கியதோடு, வீடுகளின் உள்ளே இருந்த பொருட்களையும், வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.   இதனால், நெகாம்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு, பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அத்துடன், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்  பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். 

எனினும், இச்சம்பவம் காரணமாக, இலங்கை முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இடையே எந்நேரமும் பெருங்கலவரம் வெடிக்கலாம் என, அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.