நோய் எதிர்ப்பு சக்தி! கிருமிகள் நாசம்! உடல் கொழுப்பு குறையும்! வாலை இலைக் குளியலின் மகத்துவம்!

சித்த, ஆயுர்வேத முறைப்படி மருத்துவக் குளியல் முறைகள் மற்றும் பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.


சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள் உடல் முழுவதும் வெயில்படுமாறு இருப்பதே சூரியக் குளியல். இதனால் கெட்ட நீர் வியர்வைத் துவாரங்கள் வெளியேறுவதுடன், சருமம் உறுதியாகி ரத்தச்சுழற்சி சீராகும். பித்தத்தின் ஆற்றல் அதிகரிப்பதுடன் வெப்பமும் அதிகரிக்கும். காலை 7 முதல் 9 மணி வரையும் மாலை 4 முதல் 6 மணி வரையும் சூரியக் குளியலுக்கு உகந்த நேரம் என கூறப்படுகிறது. 

மண் குளியல் என்பது கறையான் புற்று மண்ணை நீர்விட்டுப் பிசைந்து உடலில் பூசிக்கொள்ள வேண்டும். 60 நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம். பின்னர் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இதனால் உடலைக் குளிர்வித்து, நச்சுத்தன்மையை நீர்க்கச்செய்து உறிஞ்சி வெளியே எடுத்துவிடும். பசியின்மை, மனஉளைச்சலால் ஏற்படும் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை பயன்படும். 

நீராவிக் குளியலின்போது எளிமையான மெல்லிய உடைகளைப் பயன்படுத்த வேண்டும். 20 நிமிடங்கள் வரை நீராவிக் குளியல் எடுப்பது நல்லது. சருமத்துக்குப் புத்துணர்வு அளிப்பதுடன் இளமையை மீட்டுத் தரும். நீராவிக் குளியலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். 

நீராவிக் குளியல் முடித்ததும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடல் வலி மற்றும் மூட்டு வலிகள் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். முதுகுத்தண்டுவடப் பகுதி மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம், இறுக்கம், உடல் வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, பக்கவாதம், நடப்பதில் சிரமம், கால் மற்றும் பாத எரிச்சல், உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை போன்றவற்றுக்கு பலன் தரும். 

வாழையிலைக் குளியல் என்பது இயற்கை மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய புற மருத்துவக் குளியலாகும். உடலின் மேல் வாழை இலைகளைப் போர்த்திக்கொண்டு அதன்மேல் வாழை நார் அல்லது கயிற்றால் கட்டிவிட வேண்டும். 

வாழை இலைகளின்மீது சூரியக் கதிர்கள் படுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல்எடை குறையும். வாழையிலைக் குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. நெற்றிப் பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத்துணியைக் கட்ட வேண்டும். 

கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் கோளாறுகள், சர்க்கரை நோயால் வரும் பாத எரிச்சல், தூக்கமின்மை, சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றுக்கும் வாழை இலைக் குளியல் உகந்ததாகும்.