தி.மு.க.வில் ஐபேக் இல்லை... குடும்ப அராஜகம் நடக்கிறது. போட்டு உடைத்த சின்னசாமி

இத்தனை ஆண்டு காலம் தி.மு.க.வில் இலவு காத்த கிளி போல காத்திருந்த சின்னச்சாமி, இப்போது அ.தி.மு.க.வுக்குத் திரும்பியிருப்பதுடன், தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்பதையும் பட்டவர்த்தனமாகப் பேசி உடைத்திருக்கிறார்.


இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது திமுகவின் மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி முதல்வரின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சின்னசாமி, ‘‘எனக்கு பன்னிரெண்டு ஆண்டு காலம் சனி பிடித்திருந்தது. இத்தனை காலம் வெயிலில் (உதயசூரியன்) இருந்து இப்போது அதிமுகவில் இணைந்துள்ளேன். நாளை. முதல் அதிமுகவின் வெற்றிக்காக பேசுவேன். திமுகவில் தலைவர் ஸ்டாலின் சுதந்திரமாக செயல்படுவதை சில தீய சக்திகள் தடுக்கின்றன. அது அவருடைய குடும்பம்தான். 

மேலும் சின்னசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாமன் என்றும்; தான் அ.தி.மு.க.வில் அங்கம் என்றும், ஒரு மாமாங்கம் (12 ஆண்டுகள்) கழித்து அதிமுகவில் இணைந்துள்ளேன்" எனவும் அவர் பேசியது கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. திடீரென சின்னசாமிக்கு இருமல் வரவே, அவர் சுதாரித்துக்கொண்டு, ‘எனக்கு சனி விலகிவிட்டது ஆனால், சளி பிடித்துக்கொண்டது. இதுவும் சரியாகிவிடும். இனி அ.தி.மு.க.வுக்கு நல்ல காலம்தான்’ என்று கூறி சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்.