சீன அதிபருக்கு மாமல்லபுரம்! ரஷ்ய அதிபருக்கு மதுரை! ஜல்லிக்கட்டு பார்க்க அலங்காநல்லூர் வரும் விளாடிமிர் புடின்?

தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு அப்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி நடைபெற்றது.  

இதையடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் தமிழகத்தின் மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாகவும் தை மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண உலகத் தலைவர்களில் ஒருவரான ரஷ்ய அதிபர் வருவது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே பெருமைப்படும் என்றால் அது மிகையல்ல.

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை வீரர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.