எஸ்ஸார் மின்சார ஆலையில் நச்சு சாம்பல்! குழந்தைகளுக்கு ஏற்பட்ட விநோத நோய்! அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

டெல்லி: எஸ்ஸார் நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையில் இருந்து நச்சு சாம்பல் கசிவதாக, பொதுமக்கள் அதிர்ச்சிகர புகார் தெரிவித்துள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலம், சிங்கராவ்லி பகுதியில் எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான அனல் மின உற்பத்தி நிலையம் உள்ளது. இது 21,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

நிலக்கரியில் இயங்கும் 10 மின் உலைகள் செயல்பட்டு வரும் இங்கு, நிலக்கரி சாம்பல் அனைத்தும் செயற்கை குளம் ஒன்று உருவாக்கி அதனுள் புதைத்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சாம்பல்  குளத்தில் கசிவு ஏற்பட்டு, அதில் இருந்து நிலக்கரி சாம்பல் கலந்த நீர் வெளியேறி, சுற்றுப்புற கிராம நீர்நிலைகளில் கலந்து மாசுபடுத்தி வருவதாக, பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர். தற்போதைய நிலையில், 4 கிலோ மீட்டர் அளவுக்கு விவசாய நிலங்கள் இந்த சாம்பலால் பாதிக்கப்பட்டு, விவசாயம் அடியோடு முடங்கியுள்ளது. 

சிங்கராவ்லி கிராமம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. இதனால், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இந்த நச்சு சாம்பல் கலந்த நீரால் பாதிப்பு ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர காற்றிலும் சாம்பல் கலந்துள்ளதால், மக்கள் பலரும் சுவாச பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். விளைநிலங்களில் சுமார் 4 அடி உயரத்திற்கு சாம்பல் படிந்துள்ளதால், என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே காசியாபாத் நகருக்கு அடுத்தப்படியாக, அதிக மாசு ஏற்பட்டுள்ள தொழிற்பேட்டையாக  சிங்கராவ்லி மாறியுள்ளதாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சாம்பல் புதைக்கும் குளத்திற்கு, களிமண், செங்கல் மற்றும் கான்கிரீட் கலவை கலந்து தடுப்புச் சுவர் வைக்காமல், வெறும் சாம்பலில் தடுப்புச் சுவர் கட்டியதால், திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாம்பலில் ஆர்சனிக் நச்சுப் பொருள் உள்ளதால், மக்களுக்கு கடும் பாதிப்புகள் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, இந்த சாம்பல் குளம் சதித்திட்டத்தின் பேரில் உடைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய சதி உள்ளதாகவும் எஸ்ஸார் நிறுவனம் சந்தேகம் எழுப்பியுள்ளது. சில மர்ம நபர்கள் இந்த செயலை செய்ததாகக் கூறி, உள்ளூர் போலீசில் எஸ்ஸார் நிறுவனம் புகார் ஒன்றையும் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.