5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கம்! சென்னையில் காதல் கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு!

சென்னை கூடுவாஞ்சேரியில் காதலித்து திருமணம் செய்த தம்பதி குழந்தை பிறக்காத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.


சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ரியாஸ். எலக்ட்ரிஷியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டு  கூடுவாஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்தனர்.

கடந்த 14ம் தேதி நள்ளிரவு ரியாஸ் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரியாசும் தமிழ்ச்செல்வியும் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து மறைமலை நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து நெருப்பை அணைத்தனர். ரியாஸ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தமிழ்ச் செல்வி சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 

போலீசாரின் விசாரணையில் ரியாஸ் தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது தெரிய வந்தது. இதனால் இருவரும் விரக்தியுடன் இருந்ததாகவும், அவர்களிடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு ரியாசின் சடலத்தை வாங்கிய அவரது உறவினர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் மாலை இறுதிச் சடங்குகளைச் செய்தனர். ஆனால் தமிழ்ச்செல்வியின் சடலத்தை வாங்க அவரது உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், அம்பத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ.  அலுவலகத்துக்கும் கடந்த 4 நாட்களாக அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்டிஓ தேர்தல் தொடர்பாக வெளியூர் சென்றுள்ளதால்  சடலத்தை பெற முடியாமல் தவித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.