மீண்டும் முதல்வராக இருக்கும் எடப்பாடி கடந்து வந்த பாதையைப் பார்ப்போமா..?

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு விட்டார். இதுவரை முதல்வர் பதவிக்கு போட்டியாளராக சித்தரிக்கப்பட்ட பன்னீர்செல்வமே, எடப்பாடியை முதல்வராக அறிவித்திருப்பது தான் மிகச்சிறந்த ராஜதந்திரமாக பார்க்கப்படுகிறது.


அதுசரி, யார் இந்த எடப்பாடி பழனிசாமி? அவரது வெற்றிப் பயணத்தைக் கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம்.  

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சிலுவம்பாளையம் என்கிற குக்கிராமத்தில் கடந்த 1954 ஆம் ஆண்டு பிறந்தார் எடப்பாடி. பள்ளிக் கல்வி பயில ஏறத்தாழ 5 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை. ஆனாலும் உற்சாகத்துடன் சென்றார். 

கல்லூரி வாசலைத் தொட்ட சமயத்தில் அரசியல் ஆசை துளிர் விட்டது. 17வது வயதில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். கல்லூரி படிப்பை முடித்ததும் வெல்லம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வந்ததால் 1982ல் எடப்பாடி ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். 85ல் சேலத்தில் ஜெயலலிதா பேரவையை தொடங்கினார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையை ஏற்றார். 1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த சேவல் சின்னத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து சேலம் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 91ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 96 தேர்தலில் இதே தொகுதியில் தோல்வியடைந்தார். 98ல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அடுத்த ஆண்டு நடைபெற்ற எம்.பி தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

 வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் கட்சிப் பணியில் எடப்பாடி கண்ணும் கருத்துமாக இருந்தார். இதன் காரணமாக எம்ஜிஆர், தனக்குக் கொடுத்த கொள்கைபரப்பு செயலாளர் பதவியை ஜெயலலிதா2001ல் எடப்பாடிக்கு வழங்கினார். அந்தளவிற்கு ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார். அத்துடன் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியையும் பரிசளித்தார் ஜெயலலிதா. 

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் அதிமுகவை வலுப்படுத்தும் வேலைகளை முன்னெடுத்தார். மாவட்டத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார், இதன் எதிரொலியாக 2011 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றிபெற்றது. எடப்பாடி தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற பழனிச்சாமியை நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக நியமித்தார் ஜெயலலிதா.

சசிகலாவுடனான நெருக்கம் காரணமாகவே இந்த வாய்ப்பு கிட்டியதாகக் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு நெருக்கமான அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. ஆனால் எடப்பாடி வெற்றிகரமாக பதவியில் தொடர்ந்தார். ஜெயலலிதா அரசில் அமைச்சர் பொறுப்புகள் அடிக்கடி மாற்றப்படுவது வழக்கம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அதே நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியில் நீடித்தது, ஜெயலலிதாவுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

 ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. பன்னீர் தனி அணியாக, சசிகலா சிறைக்குச் செல்ல இக்கட்டான சூழ்நிலையில் முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி. கொஞ்ச நாட்களில் தினகரனும் போர்க்கொடி உயர்த்த, இன்னொரு பக்கம் திமுகவும் முஷ்டியை உயர்த்தியது. ஒரு மாதத்திற்கு தாக்குப் பிடிக்குமா எடப்பாடி ஆட்சி! என பலரும் கேலி பேசினர். ஆனால் அப்படி பேசியவர்களே வாயடைத்துப் போகும் அளவிற்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்சிக்கட்டிலில் நான்காவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறார் எடப்பாடி.

இனிமேலும் அவரே முதல்வராக தொடர்வார் என்றே நம்புவோம்.