முதல்வர் எடப்பாடியார் நெகிழ்ச்சி. முதல்வருக்கு மாணவர்களும் பெற்றோரும் கண்ணீர் மல்க நன்றி.

தமிழகத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சலிங் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.


இன்று தொடங்கிய கலந்தாய்வில் 18 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இப்படியொரு வாய்ப்பு வாழ்வில் கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி மிகுந்த பெருமிதத்துடன் பேசினார். ‘’இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்திய நாள். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும். நீட் தேர்வு ரத்து செய்ய கோரி பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம்.அரசு பள்ளியில் படித்துவரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம். 

நீட் தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு, வசதி குறைவாக இருந்தது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 49 சதவீதம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி இந்த சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. நான் முதல்வரான பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன,'’ என்றார்.

இன்றைய நிலையில் தமிழகத்தில், 3,032 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களும், 165 பி.டி.எஸ் படிப்புக்கான இடங்களும் உள்ளன. முதல் 3 நாட்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழக அரசின் 7.5% உள் ஒதுக்கீட்டால், பேர்ணாம்பட்டை அடுத்த கௌராபேட்டையைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ராஜேந்திரன்-பழனியம்மாள் தம்பதியின் மகன் குணசேகரனுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இவர், டி.டி.மோட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 477 மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் 1,200க்கு 1,080 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.