ஓ.பன்னீர்செல்வத்துக்காக ஸ்டாலினை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று செயலாற்றி வருகிறார்கள். ஆனால், இவர்களுக்கு இடையில் பிரச்னை இருப்பதாக பலரும் கயிறு திரித்துவருகிறார்கள்.


அப்படிப்பட்ட நபர்களுக்கு நோஸ்கட் கொடுப்பது போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.க்காக ஸ்டாலினை மிரட்டி குரல் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

ஆம், இன்று திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கப் பேசினார். கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் செய்துவரும் மோசடிகளைப் பேசினார். 

அப்போது, ‘ஒரு வேதனையான விஷயம். ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொகுதியான எடப்பாடி மற்றும் தேனியில் பெண்களை வைத்து மக்கள் கிராம சபை கூட்டம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு இருக்கிற பெண்களுக்கு துணை முதலமைச்சர் மீது குற்றச்சாட்டை சொல்ல சொல்கிறார். 

கொரோனா லாக்டவுன் காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு வர முடியாமல் டெல்லியில் சிக்கி தவித்த சுமார் 400 இஸ்லாமிய பெருமக்களை தன்னுடைய சொந்த செலவில் இரயிலிலே அழைத்து வந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்த தலைவர் ஓபிஎஸ் அவர்கள். 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினார். அங்கே ஒரு பெண்மணி ஒரு தவறான கருத்தை சொல்லி, ஸ்டாலின் அதற்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு நாகரிகமில்லாத அரசியல் கட்சி தலைவர். வேண்டுமென்றே துணை முதலமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்.

எந்த அரசியல் கட்சித் தலைவரும், தவறான செய்தியை ஒரு பெண்ணிடத்திலே சொல்லி கொடுத்து, அதை பேச வைத்து, பிரச்சுரம் செய்து, அரசியல் நாடகம் ஆட மாட்டார்கள். இதன்மூலம் அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறார் ஸ்டாலின். நேருக்கு நேர் அரசியலில் மோதிப் பார். அப்பாவி மக்களை வைத்து அவர்களை பேச வைத்து மோத வேண்டாம். அண்ணா திமுக எஃகு கோட்டை, இதில் மோதினால் மண்டை தான் உடையும். 

எங்கள் இயக்கத்தின் தலைவர்கள் மீதோ, தொண்டர்கள் மீதோ வீண் பழி சுமத்தினால் நீங்கள் வெளியில் கூட நடமாட முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.’’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

எடப்பாடியாரின் இந்த பேச்சைக் கேட்டு ரத்தத்தின் ரத்தங்கள் சந்தோஷத்தின் உச்சத்திற்கே போயிருக்கிறார்கள்.