சிதம்பரத்துக்கு 3 லட்சம் கோடி சொத்துக்களா ? செய்திகளைப் பரப்பும் பா.ஜ.க.!

சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்திருப்பதை தங்களுடைய மிகப்பெரிய வெற்றி என்பது போன்று பா.ஜ.க. கொண்டாடி வருகிறது. ஏனென்றால், கடந்த ஆட்சிக் காலத்திலேயே அவரை கைது செய்ய முயற்சி எடுத்து முடியாமல் போனது.


எப்படியோ இந்த முறை கைது செய்துவிட்டார்கள். அது மட்டுமின்றி, சிதம்பரம் பற்றி என்னென்ன செய்திகள் பரப்பமுடியுமோ அதையெல்லாம் பரப்பி வருகிறார்கள்.

சமீபத்தில் ஒரு மலையாள சேனல் சிதம்பரத்தின் சொத்துக் கணக்கை வெளியிட்டது என்று சொல்லி, தமிழக பா.ஜ.க. ட்வீட்டர் மூலம் சிதம்பரத்தின் சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிதம்பரத்துக்கு சென்னையில் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர்கள், 300 ஏக்கர் நிலம், ராஜஸ்தானில் 2,000 ஆம்புலன்ஸ், வெளிநாட்டில் 500 ஏக்கர் மருத்துவமனை, குதிரைப்பண்ணை இருப்பதாக சொல்கிறார்கள். சென்னையில் 40 மால்கள் எங்கே இருக்கிறது என்பதை பா.ஜக.வினர்தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

இதுதவிர இன்று வெளியான ஒரு இதழில் பா.ஜ.க.வை சேர்ந்த மாநில இளைஞரணிச் செயலாளர் வினோத், சிதம்பரத்துக்கு 67 நாடுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடிகளுக்கு சொத்துமதிப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதுதவிர, இந்திய ரூபாய் அச்சிடும் பணியைக் கொடுத்ததில் தீவிரவாதிகளுக்கு சிதம்பரம் ஆதரவு நிலை எடுத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். வழக்கு தவிரவும் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர்செல் மேக்சிஸ் போன்ற பல்வேறு வழக்குகள் சிதம்பரத்தின் மீது இருப்பதால் திகார் ஜெயிலை பார்க்காமல் திரும்பமுடியாது என்று உறுதியாகியுள்ளது.